ADDED : டிச 21, 2025 05:07 AM

சென்னை: பா.ம.க., தலைவர் அன்புமணி, தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தொகுதியில் போட்டியிட, அக்கட்சியினர் பலர் விருப்ப மனு அளித்து உள்ளனர்.
வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பும் பா.ம.க.,வினர், கடந்த 14 முதல் 20 வரை விருப்ப மனு அளிக்கலாம் என அன்புமணி அறிவித்திருந்தார். இது, வரும் 27ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ராமதாஸ் -- அன்புமணி இடையிலான மோதலால், பா.ம.க.,வில் பிளவு ஏற்பட்டுள்ளது. அப்பா - - மகன் இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர்.
வாய்ப்பில்லை
அன்புமணி மீதான ஊழல் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என, ராமதாஸ் தலைமையில் நடந்த நிர்வாகக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
இதனால், இருவரும் சமாதானமாக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலில் களமிறங்க, அன்புமணி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2016 சட்டசபை தேர்தலில், தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் போட்டியிட்ட அன்புமணி, குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., சார்பில் அதன் கவுரவ தலைவர் ஜி.கே.மணி, பென்னாகரத்தில் போட்டியிட்டு வென்றார்.
இப்போது, ராமதாஸ் பக்கம் இருக்கும் அவர் தான், தன்னை அப்பாவிடம் இருந்து பிரித்து விட்டதாகவும், அவர் தி.மு.க.,வின் கைக்கூலி, துரோகி எனவும் அன்புமணி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதனால், வரும் தேர்தலில், ஜி.கே.மணியை தோற்கடிக்க முடிவு செய்துள்ள அன்புமணி, அவர் எம்.எல்.ஏ.,வாக உள்ள பென்னாகரத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதை உணர்ந்த பா.ம.க., நிர்வாகிகள், குறிப்பாக தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர், பென்னாகரத்தில் அன்புமணி போட்டியிட வேண்டும் என விருப்ப மனு அளித்துள்ளனர்.
விருப்ப மனு
கடந்த லோக்சபா தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட அன்புமணியின் மனைவி சவுமியா, தீவிர அரசியலில் களமிறங்கியுள்ளார். சட்டசபை தொகுதி வாரியாக, மகளிரணி கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்.
பென்னாகரத்தில் போட்டியிட திட்டமிட்டிருந்த அவர், இப்போது தன் தந்தையும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கிருஷ்ணசாமியின் சொந்த தொகுதியான செய்யாறில் போட்டியிட ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
அதை தொடர்ந்து, செய்யாறில் சவுமியா போட்டியிட, பா.ம.க., நிர்வாகிகள் பலர் விருப்ப மனு அளித்துள்ளனர்.

