ADDED : ஜன 07, 2024 05:53 AM

வட மாநிலங்களில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்தாலும், தென்னகத்தில் பலமாக உள்ளது காங்கிரஸ். பா.ஜ.,விடமிருந்து, கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்றியது; அடுத்து தெலுங்கானாவில் வெற்றி பெற்று, சந்திரசேகர ராவை ஒரு வழியாக்கி விட்டது.
காங்கிரசின் அடுத்த இலக்கு ஆந்திரா. இங்கு, ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக உள்ளார். இவருக்கும், இவரது சகோதரி ஷர்மிளாவிற்கும் பிரச்னை. இதை பயன்படுத்தி ஷர்மிளாவை தன் பக்கம் இழுத்துக் கொண்டது காங்கிரஸ். அண்ணன் -- தங்கை சண்டையில் காங்., குளிர் காய விரும்புகிறது.
ஷர்மிளாவிற்கு ராஜ்யசபா எம்.பி., சீட் தருவதாக காங்., உறுதி அளித்துள்ளது. அத்துடன், கட்சியின் முக்கிய பதவியும் அவருக்கு வழங்கப்பட உள்ளதாம். மத்தியில் காங்., ஆட்சியில் இருந்த போது, ஜெகன் மீது சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை வழக்குகளை தொடர்ந்தது; அவை இப்போதும் நிலுவையில் உள்ளன.
இதை முன்னிலைபடுத்துவதோடு, ஜெகனுக்கு எதிராக தீவிர பிரசாரம் செய்ய இருக்கிறார், ஷர்மிளா. 'எப்படியாவது கர்நாடகா, தெலுங்கானாவை அடுத்து ஆந்திராவையும் கைப்பற்ற காங்., தீவிர முயற்சியில் இறங்கி உள்ளது. 2014ல் ஆந்திராவை இரண்டாக பிரித்தது காங்கிரஸ்; அதன் பின் ஆந்திரா, தெலுங்கானா இரண்டிலுமே காங்., தோல்வியை சந்தித்தது. இப்போது தெலுங்கானாவை கைவசப்படுத்தியுள்ளது; அடுத்தது ஆந்திரா தான் என்கின்றனர்' காங்., தலைவர்கள்.