மாட்டுக்கார வேலனாக மாறிய அண்ணாமலை: இயற்கை விவசாயத்தில் இளைஞர்கள் வெற்றி பெற அறிவுரை
மாட்டுக்கார வேலனாக மாறிய அண்ணாமலை: இயற்கை விவசாயத்தில் இளைஞர்கள் வெற்றி பெற அறிவுரை
ADDED : அக் 27, 2025 12:41 AM

கோவை: ''விவசாயத்தில் இருக்கும் சவால்களையும், வாய்ப்புகளாக மாற்றி, இளம் தலைமுறையினர் வெற்றி பெற வேண்டும்,'' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார்.
கோவை மாவட்டம், தொண்டாமுத்துார் அருகே மத்வராயபுரம் கிராமத்தில், 11 ஏக்கர் விவசாய நிலத்தை அண்ணாமலை வாங்கியது தொடர்பாக, பொது வெளியில் கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
இயற்கை விவசாயம் அதற்கு, 'விவசாய நிலத்தை தனது சேமிப்பு மற்றும் கடன் வாயிலாக வாங்கினேன். மத்திய அரசு திட்டத்தின் கீழ், பால் பண்ணை அமைக்க கடனுக்கும் விண்ணப்பித்துள்ளேன்' என, விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், தனது விவசாய நிலத்தில், தீவனம் அறுவடை செய்து, மாடுகளுக்கு உணவு அளித்து பராமரிக்கும் வீடியோவை அவரே வெளியிட்டுஉள்ளார்.
இது பற்றி, அண்ணாமலை கூறியதாவது:
எங்கள் குடும்பம், ஆண்டாண்டு காலமாக விவசாயத்தை முழுநேர பணியாக செய்து வருகிறது. அரசியலுக்கு இடையே, இயற்கை விவசாயம், மண் சார்ந்த விவசாயம் குறித்த புத்தகங்களை படிக்கிறேன். உலகளவில் விவசாயத்தில் ஏற்பட்டிருக்கும் அடிப்படை மாற்றங்கள், நம் நாட்டில் பண்டைய காலம் முதல் இயற்கை விவசாய முறை குறித்தும் படிக்கிறேன்.
காங்கேயம் மாடு உட்பட நிறைய மாடுகள் வளர்க்க ஆசை; அதற்கான வேலைகளை செய்கிறேன்.
அதேநேரம், மத்திய, மாநில அரசுகள் தரும் சலுகைகளை பயன்படுத்தி விவசாயத்தை செம்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளேன். கோவையில் விவசாயம்; கரூரில் ஆடு வளர்ப்பு என என்னுடைய நேரம் செலவாகிறது.
இந்தியாவை பொறுத்தவரை விவசாயம் மிகப்பெரிய சவாலாக உள்ளது. குடும்பங்கள், 'நியூக்ளியர்'ஆக மாறுவதே காரணம். குடும்பத்தில் இருந்து நிறைய குழந்தைகள் பிரிந்து செல்லும்போது, சொத்து பிரிகிறது. பெரிதாக விவசாயம் செய்ய முடியாமல் போகிறது.
மாற்ற வேண்டும் அமெரிக்காவில், பெரும் விவசாயிகள் இருக்கின்றனர். இந்தியாவில், சிறு குறு விவசாயிகளாக மாறிக்கொண்டு இருக்கின்றனர். அதற்கு தகுந்தாற்போல விவசாயத்தை மாற்ற வேண்டும்.
எத்தனையோ பேருக்கு விவசாயம் செய்யும் ஆசை இருக்கிறது; ஆனால் நிலம் இல்லை. நிலம் மதிப்பு கூடிக்கொண்டே செல்கிறது. விவசாயம் செய்ய விரும்பும் இளம் தலைமுறையினர் இவற்றை சவாலாக இல்லாமல், வாய்ப்பாக பார்க்க வேண்டும்.
கூட்டு முயற்சி நகரில் இருந்தாலும் கூட, நண்பர்கள் எல்லாம் சேர்ந்து, வெளியே நிலம் வாங்கி கூட்டு முயற்சி செய்யலாம். விவசாயத்தை பொறுத்தவரை கண்ணும் கருத்துமாக களத்தில் இருந்தால் மட்டுமே வெற்றி. பொழுது போக்கிற்காக விவசாயம் செய்பவர்களுக்கு வெற்றி கிடைக்காது.
இளம் தலைமுறையினர், விவசாயத்தில் லாபம் தரும் விஷயங்களை கற்றுக்கொண்டு அடிப்படை அறிவையும் வளர்க்க வேண்டும்.
கால்நடை வளர்ப்பு, இயற்கை விவசாயம், ரசாயன உரம் இல்லாத விவசாயம் என கலந்து செய்யும்போது தான் லாபம் கிடைக்கும்.
தரமான பாலை வேகமாக வாடிக்கையாளர்களிடம் சேர்ப்பது சவாலானது. இதற்கு, மத்திய அரசு பல திட்டங்களை வைத்துள்ளது. 'நேஷனல் கோகுல் மிஷன்' திட்டத்தில் மத்திய அரசு மானியத்துடன் சலுகை வழங்குகிறது. இதை இளம் தலைமுறை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

