சிங்காநல்லூரில் களமிறங்க அண்ணாமலை ஆர்வம்; பல்லடத்தில் போட்டியிட வைக்க பழனிசாமி முடிவு
சிங்காநல்லூரில் களமிறங்க அண்ணாமலை ஆர்வம்; பல்லடத்தில் போட்டியிட வைக்க பழனிசாமி முடிவு
ADDED : மார் 14, 2026 06:31 AM

சென்னை: திருப்பூர் மாவட்டம், பல்லடம் சட்டசபை தொகுதிதியில் போட்டியிடுமாறு, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலையை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, வலியுறுத்தி வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, பா.ஜ., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: ஓரிரு நாட்களில், சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், அ.தி.மு.க., கூட்டணியில், அதிகாரப்பூர்வ தொகுதி பங்கீட்டு பேச்சு துவங்கவில்லை. ஆனாலும், பா.ஜ., - பா .ம.க., உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து, பழனி சாமி தொடர்ந்து பேசி வருகிறார்.
எதிர்பார்க்கப்பட்ட தே.மு.தி.க., வராததால், பா.ஜ., - பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள், அதிக தொகுதிகளை கேட்கின்றன. பா.ஜ.,வை பொறுத்தவரை, கன்னியாகுமரி, துாத்துக்குடி, நெல்லை, தென்காசி, தென் சென்னை, கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய லோக்சபா தொகுதிகளுக்குட்பட்ட சட்டசபை தொகுதிகளை குறி வைத்து கேட்கிறது.
கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ள வானதி, வரும் தேர்தலில், கோவை வடக்கில் போட்டியிடுகிறார். கடந்த 2024 லோக்சபா தேர்தலில், கோவை தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை, வரும் சட்டசபை தேர்தலில், சிங்காநல்லுார் தொகுதியில் போட்டியிட விரும்புகிறார்.
ஆனால், கோவை மாவட்டத்தில், பா.ஜ.,வுக்கு ஒரு தொகுதி தான் தர முடியும். வேண்டுமானால், கோவை லோக்சபா தொகுதிக்குட்பட்ட பல்லடம் அல்லது 2021ல் போட்டியிட்ட கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில். அண்ணாமலை போட்டியிடலாம் என, பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகரில் குறைந்தது, நான்கு தொகுதிகளை பா.ஜ., கேட்கிறது. அதுவும் தென் சென்னை லோக்சபா தொகுதிக்குள், இரு தொகுதிகளை கேட்கிறது. வரும் சட்டசபை தேர்தலில், போட்டியிடுவதில் உறுதியாக இருக்கும், முன்னாள் கவர்னர் தமிழிசை, வேளச்சேரி தொகுதியில் போட்டியிட முயற்சித்து வருகிறார்.
நேற்று முன்தினம் டில்லி சென்ற அவர், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசியத் தலைவர் நிதின் நபின், அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ் ஆகியோரை சந்தித்து, வேளச்சேரி தொகுதியை பெற்றுத் தருமாறு வலியுறுத்தி உள்ளார். ஆனால், விருகம்பாக்கம் அல்லது மயிலாப்பூர் தொகுதியை ஒதுக்க, பழனிசாமி விரும் புவதாக, அ.தி.மு.க.,வினர் தெரிவிக்கின்றனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

