அண்ணாமலை தலைவர்; நயினார் ஒருங்கிணைப்பாளர்: பா.ஜ., மேலிடம் புது முடிவு
அண்ணாமலை தலைவர்; நயினார் ஒருங்கிணைப்பாளர்: பா.ஜ., மேலிடம் புது முடிவு
UPDATED : ஏப் 07, 2025 05:59 AM
ADDED : ஏப் 05, 2025 08:50 PM

தமிழக பா.ஜ., தலைவராக, அண்ணாமலை நீடிக்க வைக்கவும், கூட்டணி பேச்சு நடத்த, தே.ஜ., கூட்டணிக்கு தமிழக ஒருங்கிணைப்பாளராக நயினார் நாகேந்திரனை நியமிப்பது குறித்தும், டில்லி பா.ஜ., மேலிடம் ஆலோசித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக பா.ஜ., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:
பா.ஜ., தேசிய செயற்குழுக் கூட்டம், வரும் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை பெங்களூருவில் நடக்கவுள்ளது. அதில் பா.ஜ., தேசிய தலைவர் தேர்வும் நடக்கவுள்ளது.
புதிய தலைவராக முன்னாள் மத்திய அமைச்சரும், என்.டி.ராமராவ் மகளுமான புரந்தேஸ்வரி, மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், பிரகலாத் ஜோஷி, மனோகர்லால், பூபேந்தர் யாதவ், கிஷன் ரெட்டி போன்றவர்களின் பெயர் பரிசீலனையில் உள்ளது.
தேசிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், மத்திய அமைச்சர்களில் சிலர், கட்சி பணிகளுக்கும், கட்சி பணிகளில் இருப்பவர்கள் சிலர் மத்திய அமைச்சர் பதவிக்கும் மாற்றம் செய்யப்படுகின்றனர்.
தமிகத்தில், 2026ம் ஆண்டின் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வை கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில், மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா ஈடுபட்டுள்ளார்.
சமீபத்தில், டில்லியில் உள்ள தன் வீட்டிற்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை அழைத்து பேசினார். அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கு, அ.தி.மு.க., தரப்பில் பா.ஜ., மேலிட தலைவர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விலக இருப்பதாக தகவல் வெளியானது. இப்படி தகவல் வெளியானதை ஏற்காத, பா.ஜ., தொண்டர்கள், எதிர்ப்பு தெரிவித்தனர்.
'அண்ணாமலை தலைவராக தொடர்ந்தால் தான், தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு எதிர்காலம்; அதனால், அவரை மாற்ற கூடாது' என, பா.ஜ., வினர் மின்னஞ்சல் வாயிலாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் வலிறுத்தி வருகின்றனர்.
தொண்டர்களின் கருத்துக்கு மதிப்பு அளிக்கும் வகையில், 'அண்ணாமலை தலைவராக தொடருவார்; அவரால், கூட்டணியில் பாதிப்பு இருக்காது. உங்கள் கட்சி சார்பில் ஒருவரை மத்திய அமைச்சராக்குகிறோம்; அந்த எம்.பி., சார்ந்திருக்கும் இனத்தின் ஓட்டுக்கள், சேலத்தில் உங்களின் வெற்றிக்கு உதவும்' என, பா.ஜ,, மேலிடம், பழனிசாமி தரப்பிடம் பேசியுள்ளது.
அதற்கு எவ்வித பதிலும் சொல்லாமல் பழனிசாமி, தமிழகம் திரும்பி விட்ட நிலையில், எப்படியும் கூட்டணிக்கு அ.தி.மு.க., சம்மதிக்கும் என அமித் ஷா காத்திருக்கிறார். ஒருவேளை, அதற்கு சம்மதிக்காமல் முரண்டு பிடித்து வேறு பக்கம் அ.தி.மு.க.,வை பழனிசாமி செலுத்தும் பட்சத்தில், பழனிசாமிக்கு பதிலாக செங்கோட்டையனைக் கொண்டு அ.தி.மு.க.,வை வழி நடத்த வைக்கும் யோசனைக்கு பா.ஜ., தரப்பு வந்திருக்கிறது.
இதையடுத்தே, சமீபத்தில் டில்லி சென்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். அமித் ஷாவையும் ரகசியமாக சந்தித்து, தமிழகம் திரும்பியதாக கூறப்படுகிறது.
செங்கோட்டையன் தலைமையிலான அ.தி.மு.க.,வுடன் பா.ஜ., கூட்டணி வைத்துக் கொள்ளவும் பா.ஜ.,விடம் வலுவான திட்டம் இருப்பதாகவும் அக்கட்சியினர் கூறுகின்றனர்.
இதனால், பா.ஜ.,வின் தேசிய தலைவர் தேர்வுக்கு முன்னதாக. தமிழக பா.ஜ., தலைவராக அண்ணாமலையையே நீட்டிக்க வைக்கலாம் என்ற முடிவுக்கு அமித் ஷா வந்திருப்பதாக கூறப்படுகிறது.
அதனால், அண்ணாமலைக்கு அடுத்த நிலையில் கட்சியில் இருக்கும் மூத்த தலைவர் நயினார் நாகேந்திரனை, மத்திய அமைச்சர் ஆக்குவது அல்லது தேர்தல் கூட்டணி பேச்சு நடத்த தே.ஜ., கூட்டணிக்கு தமிழக ஒருங்கிணைப்பாளராக நியமிக்கலாம் என பா.ஜ., டில்லி மேலிடம் ஆலோசித்துள்ளது.
பிரதமர் மோடி தமிழகம் வருகைக்கு பின், அண்ணாமலையும் டில்லி செல்ல உள்ளார். அங்கு அமித் ஷாவை சந்தித்து பேசுகிறார். பின், 9ம்தேதி மாநில தலைவர் நீட்டிப்பு குறித்தும், ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான அறிவிப்பும் வெளிவருவதற்குரிய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
-நமது நிருபர்-