முதல்வர் மருந்தகங்களில் சுகர், பி.பி., நோயாளிகளுக்கு மட்டுமா மருந்துகள்?
முதல்வர் மருந்தகங்களில் சுகர், பி.பி., நோயாளிகளுக்கு மட்டுமா மருந்துகள்?
UPDATED : ஏப் 01, 2025 05:27 AM
ADDED : ஏப் 01, 2025 04:55 AM

மதுரை : முதல்வர் மருந்தகங்களில் சர்க்கரை நோய்(சுகர்), பி.பி.,(உயர் ரத்த அழுத்தம்) உட்பட 10 வகை நோய்களுக்கு மட்டுமே மருந்துகள் இருப்பதால் விற்பனை மந்தமாக உள்ளது. இதில் இலக்கு நிர்ணயித்து எங்களை வதைக்கின்றனர் என தமிழ்நாடு கூட்டுறவு அரசு ஊழியர் சங்கத்தினர் குமுறுகின்றனர்.
தமிழகத்தில் ஆயிரம் முதல்வர்கள் மருந்தகங்கள் சமீபத்தில் திறக்கப்பட்டன. அதில் 500 மருந்தகங்கள் கூட்டுறவுத் துறை மூலமும் மீதி தனியார் தொழில்முனைவோர் மூலம் துவக்கப்பட்டது. ஒவ்வொன்றிலும் ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டது. அதில் பெரும்பகுதி பி.பி., சுகர் நோய்கள் சார்ந்தே உள்ளது. குழந்தைகளுக்கான 'சிரப்' வடிவ மருந்துகள் குறைவு.
சுகர், பி.பி., மருந்துகளை எத்தனை பேர் வாங்குவர். தேவை போக மருந்து இருப்பு இருந்தால் எங்களை விற்கச் சொல்லி இலக்கு நிர்ணயித்து கட்டாயப்படுத்துகின்றனர் என்கிறார் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் நவநீத கிருஷ்ணன்.
அவர் கூறியதாவது: அந்தந்த பகுதியில் உள்ள டாக்டர்கள் எழுதித் தரும் மருந்து சீட்டுக்கேற்ப தான் மருந்து, மாத்திரைகள் விற்பனையாகும். நுாற்றுக்கும் மேற்பட்ட நோய்களுக்கான மாத்திரைகள் இருந்தாலும் முதல்வர் மருந்தகங்களில் குறிப் பிட்ட 10 வகை நோய்களுக்கான மாத்திரைகள் தான் உள்ளன. மாத்திரை சீட்டுடன் வருபவர்கள் பாதி மாத்திரை இல்லாவிட்டால் மீதி மாத்திரையும் வாங்காமல் வேறு மருந்து கடைக்கு செல்கின்றனர். இதனால் எங்களுக்கு தான் விற்பனை இழப்பு ஏற்படுகிறது. மலிவு விலைக்கு மருந்துகள் விற்பது நல்ல விஷயம் தான். அனைத்து நோய்களுக்கான மாத்திரைகளையும் இருப்பு வைத்தால் தான் விற்பனைதடையின்றி நடைபெறும்.
ஏற்கனவே தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் அம்மா மருந்தகங்களில் அப்பகுதி மக்களின் தேவைக்கேற்ப உள்ளூரில் கொள்முதல் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் முதல்வர் மருந்தகங்களில் அரசு தரும் மருந்துகளை மட்டுமே வாங்கி விற்க முடியும். மக்களின் தேவைக்கேற்ப மருந்துகளை கேட்டாலும் தருவதாக உறுதி அளிக்கின்றனரே தவிர இதுவரை மருந்தகங்களுக்கு அனுப்பவில்லை. குறைவான விலையிலான மாத்திரைகள் நோயாளிகளுக்கு கிடைக்கவேண்டும் என்றால் அனைத்து வகை மாத்திரைகளையும் விற்க அனுமதி தரவேண்டும் என்றார்.

