நீட் விலக்கு தந்தால்தான் பா.ஜ.,வுடன் கூட்டணி என அறிவிக்க தயாரா? பழனிசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் சவால்
நீட் விலக்கு தந்தால்தான் பா.ஜ.,வுடன் கூட்டணி என அறிவிக்க தயாரா? பழனிசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் சவால்
ADDED : ஏப் 06, 2025 11:47 PM

ஊட்டி: “பா.ஜ.,வுடன் கூட்டணிக்கு போவதற்கு முன், 'நீட்' விலக்கு தந்தால் தான் கூட்டணி என, வெளிப்படையாக பழனிசாமி அறிவிக்கத் தயாரா?” என, முதல்வர் ஸ்டாலின் சவால் விடுத்தார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில், 494 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
கணக்கெடுப்பு
தொடர்ந்து, ஊட்டி அரசு கலை கல்லுாரி மைதானத்தில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியதாவது:
தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில், மிகப்பெரிய சதி நடக்க இருப்பதை முதன்முதலில் உணர்ந்து, மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்த மாநிலம் தமிழகம் தான். வர உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் மேற்கொள்ள உள்ள தொகுதி மறுசீரமைப்பு, நம்மை போன்ற மாநிலங்களை வெகுவாக பாதிக்கும்.
தமிழக மண்ணில் ராமேஸ்வரம் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, தொகுதி மறுசீரமைப்பால் தமிழக மக்களுக்கு ஏற்படும் நியாயமான அச்சத்தை போக்க வேண்டும்.
லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கை குறையாது என்பதை அறிவிக்க வேண்டும். வக்ப் திருத்த சட்டம் ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, 'பா.ஜ.,வுடன் கூட்டணி உள்ளது; இல்லை' என்று மாற்றி, மாற்றி பேசுகிறார். உங்களுக்கு நான் ஒரு சவால் விடுகிறேன்.
தமிழக மாணவர்கள் மீது உங்களுக்கு துளியாவது அக்கறை இருந்தால், பா.ஜ.,வுடன் கூட்டணிக்கு போவதற்கு முன், 'நீட் விலக்கு தந்தால் தான் கூட்டணி' என்று வெளிப்படையாக அறிவிக்க முடியுமா, என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய வளர்ச்சி திட்டம்
முன்னதாக, 494 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிந்த 1,703 பணிகளை துவக்கி வைத்தார். 130 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 56 புதிய வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 15,000 பயனாளிகளுக்கு, 102 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் வேலு, சுப்பிரமணியன், சாமிநாதன், அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன், ராஜா எம்.பி., மற்றும் அரசு துறை செயலர் செந்தில்குமார், கலெக்டர் லட்சுமி பவ்யா உட்பட பலர் பங்கேற்றனர்.

