ஊழல் குற்றச்சாட்டுகளால் வீழ்ந்த அரவிந்த் கெஜ்ரிவால்
ஊழல் குற்றச்சாட்டுகளால் வீழ்ந்த அரவிந்த் கெஜ்ரிவால்
UPDATED : பிப் 17, 2025 03:14 PM
ADDED : பிப் 17, 2025 10:27 AM

நாட்டின் தலைநகரான டில்லியில், இம்மாதம், 5ம் தேதி நடந்த சட்டசபை தேர்தலில், அங்கு ஆட்சியில் இருந்த, முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியை தோற்கடித்து, பா.ஜ., ஆட்சியை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை.
ஆனாலும், அதன்பின் நடந்த ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில், பா.ஜ., அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதன் தொடர்ச்சியாக, தற்போது டில்லியையும் கைப்பற்றியுள்ளது. இதன் வாயிலாக, 26 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
கடந்த 2015 மற்றும் 2020 சட்டசபை தேர்தல்களில், பா.ஜ., - காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை வீழ்த்தி, பெரிய அளவில் வெற்றிக்கொடி நாட்டிய ஆம் ஆத்மி கட்சி, இம்முறை தோல்வியை தழுவியதற்கு, அக்கட்சியின் மேல்மட்ட தலைவர்கள் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளும், அரசு மீதான அதிருப்தியுமே முக்கிய காரணமாகும்.
காந்தியவாதி அன்னா ஹசாரே துவக்கிய ஊழலுக்கு எதிரான இயக்கம் வாயிலாக அறியப்பட்டவர் தான், அரவிந்த் கெஜ்ரிவால். அதன்பிறகே, ஆம் ஆத்மி கட்சியை துவக்கி, டில்லி சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்றார். அப்படிப்பட்ட கெஜ்ரிவாலே ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானது, அவரின் கட்சிக்கு பெரிய பின்னடைவாக அமைந்துவிட்டது.
கெஜ்ரிவால் மற்றும் அவரது கட்சியின் மூத்த தலைவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் உண்மையா, பொய்யா என்பது, இதுவரை நிரூபிக்கப்படவில்லை. இருந்தாலும், ஆம் ஆத்மி கட்சி மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த டில்லிவாசிகளில் ஒரு பிரிவினர், கட்சி மாறி ஓட்டுப் போடுவதற்கு, ஊழல் குற்றச்சாட்டு ஒரு வாய்ப்பாக அமைந்து விட்டது.
காங்கிரசுடன் கைகோர்க்க மறுப்பு
இதனால் தான், ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ., கட்சிகள் பெற்றுள்ள ஓட்டுகளுக்கு இடையேயான வித்தியாசம் வெறும், 2 சதவீதமே என்றாலும், முன்னர் பெற்றதை விட, 10 சதவீத ஓட்டுகளை ஆம் ஆத்மி இழப்பதற்கு, ஊழல் குற்றச்சாட்டு ஒரு கருவியாக அமைந்து விட்டது.அதுமட்டுமின்றி, தேசிய அளவில் காங்., தலைமையிலான, 'இண்டி' கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி, டில்லி தேர்தலில் காங்கிரசுடன் கைகோர்க்க மறுத்து, தனித்து களமிறங்கியது. அக்கட்சியின் தோல்விக்கு மற்றொரு காரணமாகும்.
கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், பெரும்பான்மை பெறாமல் பின்னடைவை சந்தித்ததால், இம்முறை பா.ஜ., கட்சி சுதாரித்தது. அதனால் தான், ஆம் ஆத்மி கட்சிக்கு போட்டியாக, டில்லி வாக்காளர்களை கவர, பல கவர்ச்சி திட்டங்களை தேர்தல் நேரத்தில் அறிவித்தது. அதுவும் ஆம் ஆத்மிக்கு பாதகமாக அமைந்தது.
மேலும், ஆம் ஆத்மியின், 10 ஆண்டு கால ஆட்சியில், சுகாதாரம் மற்றும் கல்வியில், பல சாதனைகளை கெஜ்ரிவால் நிகழ்த்தி இருந்தாலும், குடிநீர் விநியோகம், குப்பை கழிவுகளை அகற்றுதல், யமுனையை சுத்தம் செய்தல் போன்ற விஷயங்களில் அவரது அரசு தோல்வியையே சந்தித்தது. இதுவும், தேர்தல் வெற்றிக்கு பாதகத்தை ஏற்படுத்தியது.
வருமான வரி விலக்கு வரம்பு
இதுதவிர, மத்திய பட்ஜெட்டில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட வருமான வரி விலக்கு வரம்பு உயர்வு உள்ளிட்ட சலுகைகளும், டில்லி வாக்காளர்களில் பெரும்பான்மையாக உள்ள நடுத்தர வாக்காளர்களை கவர்ந்திருக்கலாம். அத்துடன், ஏற்கனவே ஆட்சியில் இருக்கும் போது பல பிரச்னைகளை சந்தித்த ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும், பல பிரச்னைகளை எதிர்கொள்ளலாம். நிம்மதியாக அவர்களால் செயல்பட முடியாது என்பதை உணர்ந்து, பா.ஜ.,வுக்கு, டில்லி வாக்காளர்கள் ஆதரவு அளித்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
மொத்தத்தில், டில்லி சட்டசபை தேர்தல் முடிவுகள், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் நெருக்கடியை தரலாம். அதுமட்டுமின்றி, பஞ்சாபில் உள்ள அக்கட்சியின் ஆட்சிக்கும் பிரச்னைகள் உருவாகலாம். அதை அவர் சமாளித்து, அடுத்த தேர்தலில் வெற்றி பெற முயற்சிப்பாரா என்பதே, தற்போது எழுந்துள்ள கேள்வி.