நிக்கோடின் அளவை குறைக்க உதவும் 'அஸ்கார்பிக்' அமிலம்: சென்னை பேராசிரியர் கண்டுபிடிப்பு
நிக்கோடின் அளவை குறைக்க உதவும் 'அஸ்கார்பிக்' அமிலம்: சென்னை பேராசிரியர் கண்டுபிடிப்பு
ADDED : டிச 06, 2024 12:25 AM

சென்னை : புகையிலை பயன்படுத்துவோரின் நிக்கோடின் அளவை குறைக்க, 'அஸ்கார்பிக்' அமிலம் பயன்படுத்துவதற்கான காப்புரிமையை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை உதவி பேராசிரியர் பெற்றுள்ளார்.
அசாம் மாநிலம், குவஹாட்டியில், பன்னாட்டு இந்திய அறிவியல் மாநாடு சமீபத்தில் நடந்தது. இதில், சென்னை போரூர் ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மருந்தாக்கியல் துறை உதவிப் பேராசிரியர் முருகேசன் ஆறுமுகம் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரைக்கு விருது அளிக்கப்பட்டது.
இதுகுறித்து, டாக்டர் முருகேசன் ஆறுமுகம் கூறியதாவது: சென்னையில், 1,500க் கும் மேற்பட்டோரிடம், புகையிலை பயன்பாடு குறித்த கருத்துக்கேட்பு நடத்தப்பட்டது. இதில், பெரும்பாலானோர் புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிந்தவர்களாக உள்ளனர். மேலும், 25 சதவீதம் பேர் புகையிலை பயன்பாட்டில் இருந்து மீண்டு வர நினைக்கின்றனர்.
எனவே, குறிப்பிட்ட அளவில், 'வைட்டமின் சி' போன்று, இந்த 'அஸ்கார்பிக்' அமிலத்தை பயன்படுத்துவதன் வாயிலாக, நிக்கோடின் அளவை உடலில் குறைக்க முடியும் என கண்டறிந்தள்ளோம். அது தொடர்பாக, இம்மாநாட்டில் ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டது.
மேலும், இந்த கண்டு பிடிப்பை, மருத்துவ சிகிச்சை முறையில் பயன்படுத்த, இந்திய காப்புரிமையும் பெறப்பட்டுள்ளது. சர்வதேச காப்புரிமை பெறவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு உள்ளன. இதனால், புகையிலை பிடிப்பவர்கள், நிக்கோடின் பாதிப்பில் இருந்து வெளிவர வாய்ப்புள்ளது. இது, 2025ம் ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.