வருகிறது சட்டசபை தேர்தல்! பதுங்குகிறது ஓட்டுக்கான பணம்; அரசியல் கட்சியினர் சாதுர்யம்
வருகிறது சட்டசபை தேர்தல்! பதுங்குகிறது ஓட்டுக்கான பணம்; அரசியல் கட்சியினர் சாதுர்யம்
ADDED : ஏப் 22, 2025 06:43 AM

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் 2026ம் ஆண்டு நடக்கிறது. இதனையொட்டி ஆளும்கட்சியான தி.மு.க., - எதிர்கட்சியான அ.தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளை துவக்கி ஆயத்தமாகி வருகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் பணம் முக்கிய பங்காற்றி வருகிறது.
தேர்தலின் போது ஓட்டுக்கு பணம் வினியோகம், தொண்டர்களை குஷிப்படுத்த பிரியாணி, மது வாங்கி கொடுப்பது, தொகுதியில் ஒவ்வொரு கட்சியிலும் தீவிரமாக தேர்தல் பணியாற்றும் கட்சியினரை பணம் கொடுத்து வளைப்பது போன்ற பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறும்.
ஆளும்கட்சியான தி.மு.க., மற்றும் எதிர்கட்சியான அ.தி.மு.க., தங்களது கட்சி வேட்பாளர்கள் மட்டுமின்றி, கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் செலவுக்கு பணம் வழங்குவது சம்பிரதாயமாக உள்ளது.
தேர்தல் அறிவிப்புக்குப் பின் கோடிக் கணக்கில் பணம் கொண்டு வரும்போது கண்காணிப்பு குழு, பறக்கும் படை குழுவினர் சோதனையில் சிக்கினாலும் அக்கட்சிக்கு பெரும் சிக்கல்களை ஏற்படுத்தி விடும். இதனால், பணத்தை முன்கூட்டியே கொண்டு வந்து பதுக்கி வைப்பதில் முக்கிய அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டியுள்ளனர்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் எப்படி எல்லாம் பணத்தை பதுக்கி வைக்க முடியுமோ அவ்வகையில், பல யுக்திகளை கையாண்டு சந்தேகம் ஏற்படாத வகையில் பதுக்கி வைக்கும் பணிகளில் தற்போது ஆயத்தமாகி வருகின்றனர்.
இதற்காக கட்சியினர் மூலம் ஒரு டீம் அமைத்து, மொத்த பணத்தை தனி தனியாக பிரித்து ஊரில் நம்பிக்கையான நபர்களை தேர்வு செய்து அவர்களிடம் 20, 30 லட்சம் ரூபாய் வரை என கொடுத்து பதுக்கி வைப்பதற்கு தயாராகியுள்ளனர். நம்பிக்கையானவராக இருந்தாலும், 'அண்டர் டீலிங்' முறையில் அவர்களிடம் வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கியும் வைத்துக் கொள்கின்றனர்.
மேலும், பணம் பதுக்கி வைக்கும் நபர்களுக்கு பிரதிபலனாக தொகைக்கேற்ப கமிஷன் அடிப்படையில் 50 ஆயிரம், ஒரு லட்சம் ரூபாய் என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது.
தற்போது அரசியல் கட்சியினர் பணத்தை பதுக்கி வைப்பதற்கு தேவையான நம்பிக்கைகுரிய நபர்களை தேர்வு செய்து வருகின்றனர்.