குறைந்தது உள்நாட்டு விமான சேவை; 'ஜெட்' வேகத்தில் எகிறியது கட்டணம்
குறைந்தது உள்நாட்டு விமான சேவை; 'ஜெட்' வேகத்தில் எகிறியது கட்டணம்
UPDATED : ஜன 15, 2024 02:39 AM
ADDED : ஜன 15, 2024 02:35 AM

கோவையிலிருந்து உள்நாட்டு நகரங்களுக்குச் செல்லும் விமானங்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதால், பண்டிகைக் காலத்தில் தேவை அதிகரித்து, விமான கட்டணம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.
கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து, சில மாதங்களுக்கு முன்பு வரை, தினமும் 27 உள்நாட்டு விமானங்களும், இரண்டு வெளிநாட்டு விமானங்களும் இயக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், ஒரு சில காரணங்களால், சிவில் ஏவியேஷன் ஜெனரல் (டி.ஜி.சி.ஏ.,) உத்தரவின்படி, நாடு முழுவதும், 30 'இண்டிகோ' விமான சேவை குறைக்கப்பட்டுள்ளது.
இதில், கோவையிலிருந்து சென்னைக்கு 3, ஹைதராபாத்திற்கு 2 மற்றும் பெங்களூருக்கு ஒன்று என 6 விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதன் தொடர்ச்சியாக, குறைந்த இடங்களுக்கு அதிக போட்டிகள் ஏற்பட்டு, டிக்கெட் கட்டணம் தாறுமாறாக உயர்ந்து வருகிறது.
அத்துடன், பொங்கல் பண்டிகை விடுமுறை வந்து விட்டதால், கடந்த மூன்று நாட்களாக, விமானங்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை உயர்ந்து, அதன் தொடர்ச்சியாக கட்டணமும் பல மடங்கு எகிறி வருகிறது. இருக்கைகள் குறைந்து, தேவை அதிகரித்துள்ளதால், டிக்கெட் விரைவாக விற்றுத் தீர்ந்து விடுகிறது.
அல்லது பல மடங்கு கட்டணம் அதிகமாகி விடுகிறது. இதில் சென்னைக்கு மட்டும், கட்டணம் 3 மடங்கு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, டிராவல் ஏஜென்சிகளைச் சேர்ந்த சிலர் கூறியதாவது:
கோவையிலிருந்து சென்னை மற்றும் பெங்களூருக்குச் செல்லும் விமானங்களுக்கு தான், அதிக 'டிமாண்ட்' ஏற்பட்டுள்ளது. வழக்கமாக, வார நாட்களில் சென்னைக்கு ரூ.3200 லிருந்து ரூ.3900 வரை டிக்கெட் கட்டணம் இருக்கும்.
வார இறுதி நாட்களில், இது 5 ஆயிரம் ரூபாய், சில நாட்களில் 6 ஆயிரம் ரூபாய் என உயரும். ஆனால் இப்போது சென்னைக்கான கட்டணம் ரூ.13 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
இரவு நேர விமானங்களுக்கு மட்டுமே, 10 ஆயிரத்துக்குக் குறைவாக கட்டணம் இருக்கிறது. ஜனவரி 14 நிலவரப்படி, சென்னைக்கு மாலை நேர விமான கட்டணமே, ரூ.12 ஆயிரத்து 500 ஆகவுள்ளது.
அதேபோல, பெங்களூரு செல்லும் மூன்று விமானங்கள், மும்பை செல்லும் 4 விமானங்களிலும் கட்டணம் திடீரென உயர்ந்துள்ளது. பண்டிகை காலம் என்பதுடன், விமான சேவை குறைந்ததும் முக்கியக் காரணம்.
'இண்டிகோ' நிறுவனம்தான், சென்னைக்கு அதிகமான விமானங்களை இயக்கி வருகிறது. டில்லி செல்லும் ஒரே ஒரு ஏர் இந்தியா விமானம் மட்டுமே, சென்னை சென்று அங்கிருந்து டில்லி செல்கிறது.
இதனால், சென்னைக்கான விமான தேவையே, இன்னும் அதிகமாகவுள்ளது. விமான சேவையும், இருக்கையும் குறைவதால்தான், கட்டணம் அதிகமாகியுள்ளது.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
-நமது சிறப்பு நிருபர்-