குறைந்தது பயண நேரம்; குவியுது பயணியர் கூட்டம்! வந்தே பாரத் நேர மாற்றத்துக்கு வரவேற்பு
குறைந்தது பயண நேரம்; குவியுது பயணியர் கூட்டம்! வந்தே பாரத் நேர மாற்றத்துக்கு வரவேற்பு
UPDATED : மார் 18, 2024 08:09 AM
ADDED : மார் 18, 2024 12:05 AM

பயண நேரத்தை மாற்றியமைத்த பின், கோவை-பெங்களூரு வந்தே பாரத் ரயிலுக்கான 'புக்கிங்' அதிகரித்து வருகிறது. வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை-பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவை, கடந்த ஜன.,1 ல் துவக்கப்பட்டது. காலையில் 5:00 மணிக்கு, கோவையிலிருந்தும், அங்கிருந்து மதியம் 1:40 மணிக்கும் புறப்படும் வகையில் பயண அட்டவணை இருந்தது. பயண நேரம், 6:30 மணி நேரமாக நிர்ணயிக்கப்பட்டது.
கோவையிலிருந்து காலை 6:10 மணிக்கும், பெங்களூருவிலிருந்து மதியம் 2:30 மணிக்கும் புறப்படும் வகையில், இந்த ரயிலின் நேர அட்டவணையை மாற்ற வேண்டும்; பயண நேரத்தை 5:40 மணி நேரமாகக் குறைக்க வேண்டுமென்று பல தரப்பினருரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த மார்ச் 11 லிருந்து, இந்த ரயிலின் பயண அட்டவணை மாற்றியமைக்கப்பட்டது. புதிய அட்டவணையின்படி, கோவையில் காலை 7:25 மணிக்கு புறப்படுகிறது. பெங்களூரில் இருந்து மதியம் 2:20 மணிக்குக் கிளம்புகிறது.
உதாரணமாக, கடந்த மார்ச் 12 அன்று, கோவையிலிருந்து காலை 7:25 மணிக்குப் புறப்பட்ட வந்தே பாரத் ரயில், அங்கு அட்டவணைப்படி மதியம் 1:50 மணிக்குச் சென்றடைய வேண்டும். ஆனால், மதியம் 1:02 மணிக்கே, அதாவது 48 நிமிடங்கள் முன்பாகவே சென்று விட்டது. இதனால், பயண நேரம் 6 மணி 10 நிமிடங்களுக்குப் பதிலாக, 5 மணி நேரம் 12 நிமிடங்களாகக் குறைந்துள்ளது. பயண நேரம் குறைந்ததால், வந்தே பாரத் ரயிலுக்கான 'புக்கிங்' அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
இந்த ரயிலில் உள்ள 530 ஏ.சி., சேர் கார் இருக்கைகளில், எக்ஸிகியூட்டிவ் இருக்கைகள் தவிர மற்றவை அனைத்தும் 'புக்கிங்' ஆகியுள்ளன. அடுத்த 15 நாட்களில், இதற்கான வரவேற்பு மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
-நமது நிருபர்-

