அயோத்தி நன்கொடை முறைகேடு விவகாரம்: கோபத்தில் மோடி!
அயோத்தி நன்கொடை முறைகேடு விவகாரம்: கோபத்தில் மோடி!
ADDED : ஜூன் 28, 2026 06:07 AM

- நமது சிறப்பு நிருபர் -
பா .ஜ., வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது, அயோத்தி ராமர் கோவில் விவகாரம். ஆனால் தற்போது, அதே கோவிலின் நன்கொடை முறைகேடு விவகாரம், அக்கட்சியை பெரும் சிக்கலில் ஆழ்த்தி உள்ளது.
இந்த விவகாரம், பிரதமர் மோடிக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ., தலைவர்களோ அல்லது ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினரோ என, எந் த பெரிய தலைகள் இதில் சம்பந்தப்பட்டிருந்தாலும், அவர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எ ன, அவர் உத்தரவிட்டுள்ளதாக பா.ஜ.,வினர் தெரிவிக்கின்றனர். இதை விசாரிக்க மூன்று பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளார், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்.
இதில், எட்டு பேரை சிறப்பு புலனாய்வு குழுவினர் சமீபத்தில் கைது செய்தனர். ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொதுச்செயலர் சம்பத் ராய், அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகியோர் தார்மிக அடிப்படையில் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
கைதான எட்டு பேரில் முக்கியமானவர், ராமசங்கர் என்கிற டின்னு யாதவ். இவர், அறக்கட்டளை பொதுச்செயலர் சம்பத் ராயின் டிரைவர். இவரிடம் அனைத்து பொறுப்புகளையும் ஒப்படைத்திருந்தார் சம்பத் ராய். நன்கொடை பணம் இருந்த அனைத்து பெட்டிகளின் சாவிகளும் ராமசங்கரிடம் இருந்துள்ளன.
கோவிலுக்கு ஆட்களை வேலைக்கு எடுப்பதிலும், பணம் எண்ணும் பணியை ஒதுக்கீடு செய்வதிலும் ராமசங்கரே முக்கிய பங்கு வகித்துள்ளார். மேலும், இவருக்கு அயோத்தி மற்றும் லக்னோவில், 50 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள சொத்துக்களும், ஆடம்பர குடியிருப்பு மற்றும் பல விலையுயர்ந்த கார்களும் உள்ளன.
முதல் தகவலறிக்கையில் பெயரிடப்பட்டுள்ள மனிஷ் யாதவ், டின்னு யாதவின் மருமகன் ஆவார். டின்னு, தன் மருமகனை நன்கொடை எண்ணும் குழுவில் நியமித்திருந்தார்.
'திருட்டு குறித்த புகாரை சம்பத் ராய் கண்டுகொள்ளவில்லை. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அவரை விசாரிக்க வேண்டும்' என, ஆர்.எஸ்.எஸ்., தரப்பில் கூறுகின்றனர். அறக்கட்டளையின் இன்னொரு உறுப்பினரான, அனில் மிஸ்ரா நன்கொடை எண்ணும் பொறுப்பில் இருந்தார். இவருக்கு அயோத்தியில் ஒரு பெரிய குடியிருப்பு இருப்பதுடன், ஐந்து ஆண்டுகளில் இவரது சொத்து பல மடங்கு உயர்ந்துள்ளது.
நன்கொடை முறைகேடு விவகாரம் ஆளும் பா.ஜ., அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
