உருக வைத்த அயோத்தி மண்: கருணையே வடிவான ராமரின் கண்!
உருக வைத்த அயோத்தி மண்: கருணையே வடிவான ராமரின் கண்!
UPDATED : ஜன 25, 2024 04:13 PM
ADDED : ஜன 25, 2024 07:08 AM

''அயோத்தி கும்பாபிஷேகம் நடந்த முதல் நாளிலேயே, பால ராமரை தரிசித்த பிரமிப்பில் இருந்து இன்னும் மீள முடியவில்லை,'' என, பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் விசாகா ஹரி கூறினார்.
அவர் கூறியதாவது:
ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அழைப்பின்படி, மகன் ராஜகோபால் ஹரியுடன் அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டையில் பங்கேற்கும் பாக்கியம் கிடைத்தது. விமான நிலையத்தில் இறங்கியது முதல், மீண்டும் விமானம் ஏறியது வரை அளிக்கப்பட்ட வரவேற்பு சிறப்பாக இருந்தது.
பிரம்மாண்டமான ராமர் கோவில் வளாகத்தில் அமர்ந்து பிராண பிரதிஷ்டை நிகழ்வை பார்த்தது, முதல் நாளிலேயே பால ராமரை தரிசனம் செய்தது என, அனைத்தும் ஒரு, 'மேஜிக்' போல இருந்தது. இதை அனுபவத்தில் தான் உணர முடியும்; வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
பிராண பிரதிஷ்டைக்கு அழைக்கப்பட்டிருந்த, 15,000 பேருக்கும் தேவையான அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பிராண பிரதிஷ்டை முடிந்ததும், ஹெலிகாப்டரில் மலர்கள் துாவப்பட்டன. அப்போது, தேவர்கள் புஷ்ப பூஜை செய்வது போல இருந்தது
பிராண பிரதிஷ்டையில் பங்கேற்க கிடைத்த வாய்ப்பு, ராமரின் அழைப்பு என்று தான் சொல்ல வேண்டும். ராமர் விரும்பி இருக்காவிட்டால், இது சாத்தியமாகியிருக்காது. வந்தவர்கள் அனைவரும் வி.வி.ஐ.பி.,க்கள் என்றாலும், ராமர் முன் அனைவரும் மிகச் சாதாரணமானவர்களாகவே நடந்து கொண்டனர்.
ராமர் கோவிலின் ஒவ்வொரு துாண்களும், ஒவ்வொரு சிற்பமும், ஒவ்வொரு சன்னிதியும் பிரம்மாண்டம்தான். அயோத்தி நகரும், ராமர் கோவிலும் தேவோலகம் போல இருந்தது. ராமர் பிறந்த நாளில், ராமருக்கு பட்டாபிஷேகம் நடந்த நாளில் எப்படி இருந்திருக்குமோ, அப்படி இருந்தது அயோத்தி நகரம்.
எங்கு நோக்கினும் ராமர் மயம். அத்தனை கூட்டத்தில் காதில் கேட்டது ஜெய்ஸ்ரீராம் கோஷம் மட்டுமே. இந்த பிரமிப்பிலிருந்து இன்னும் மீள முடியவில்லை. அதை நினைத்தால் இன்னும் உடல் சிலிர்க்கிறது. ஆனந்த கண்ணீர் பெருக்கெடுக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.