UPDATED : ஜன 22, 2024 06:32 AM
ADDED : ஜன 22, 2024 06:31 AM

அயோத்தியில் ராமர் கோவில், அனுமார் கோவில் பார்த்த பிறகு மக்கள் பார்க்க விரும்பும் இடம் கனக் பவன் என்றும், சோனே கா கர் என்றும் அழைக்கப்படும் தங்க மாளிகையாகும்.
இது ராமரை திருமணம் செய்து, அயோத்தி வந்த சீதைக்கு கைகேயி பரிசாக வழங்கியது என்று கூறப்படுகிறது.
மாளிகை என்று சொல்வதற்கு பொருத்தமான முறையில்பிரமாண்டமாகவும், அழகாகவும், அற்புதமாகவும் இந்த இடமும், கட்டடமும் அமைந்துள்ளது.
மாளிகையின் பிரதான இடத்தில் வெள்ளி கர்ப்பகிரகத்தில் தங்க கிரீடம் அணிந்த நிலையில், சீதையும், ராமரும் வீற்றிருந்து, வரும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
தசரதன் மேற்பார்வையில் ஆயிரக்கணக்கான விஸ்வர்கர்மாக்களால் நிர்மாணிக்கப்பட்ட இந்த மாளிகையில் ராமர் மட்டுமே வருவதற்கு அனுமதி உண்டாம்.
![]() |
நாளடைவில் சிதிலமுற்ற இந்த மாளிகையை விக்ரமாதித்திய மன்னர்தான் முதலில் எடுத்துக் கட்டியவர்; அதன்பின் இதை பழைய அழகுடன் 1891ம் ஆண்டு சீரமைத்தவர் ராணி விருஷ்பானு குன்வாரியாவார்.
மாளிகையாக இருந்து தற்போது ராமர், சீதையை வழிபடும் கோவிலாக மாறிவிட்ட கனக் பவன், ஆண்டு முழுதும் திறந்து இருக்கும். பார்வையாளர்கள் காலை 5:00 மணி முதல், இரவு 10:00 மணி வரை அனுமதிக்கப்படுகின்றனர்.
நுழைவுக்கட்டணம் கிடையாது. ராமர் கோவிலுக்கு அருகிலேயே உள்ளது. தரிசனம் செய்துவிட்டு திரும்புபவர்களுக்கு பிரசாதமும் வழங்கப்படுகிறது.
ராமர் பிறந்த நாளான ராம நவமி இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மேலும் சீதையின் பிறந்த நாளும், ஜான்கி நவமி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இந்நாட்களில் கோவில் மற்றும் சிலைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, பார்க்க மேலும் ரம்மியமாக இருக்கும்.