பழனிசாமியுடன் பைஜெயந்த் பாண்டா சந்திப்பு; கூட்டணியை விரிவுபடுத்துவது குறித்து பேச்சு
பழனிசாமியுடன் பைஜெயந்த் பாண்டா சந்திப்பு; கூட்டணியை விரிவுபடுத்துவது குறித்து பேச்சு
UPDATED : அக் 08, 2025 04:29 AM
ADDED : அக் 08, 2025 04:28 AM

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை, பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா சந்தித்துப் பேசினார். சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள பழனிசாமி இல்லத்தில் நடந்த இச்சந்திப்பின்போது, தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் உடனிருந்தார்.
கடந்த, 2024 லோக்சபா தேர்தலில் தனித்தனி அணி அமைத்து போட்டியிட்டு, தோல்வி அடைந்த அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும், கடந்த ஏப்ரல் 11ல் கூட்டணியை அறிவித்தன. ஆறு மாதங்கள் முடியவுள்ள நிலையில், இக்கூட்டணியில் வேறு யாரும் சேரவில்லை.
ஆலோசனை
இந்நிலையில், வரும் 2026 சட்டசபை தேர்தலுக்காக, பைஜெயந்த் பாண்டா, மத்திய அமைச்சர் முரளிதர் மோஹல் ஆகியோரை பொறுப்பாளர்களாக, பா.ஜ., மேலிடம் நியமித்துள்ளது. முதல் முறையாக சென்னை வந்துள்ள அவர்கள், நேற்று முன்தினம் பா.ஜ., நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ ஆகியோரை, நேற்று முன்தினம் இரவு சந்தித்து நலம் விசாரித்தனர்.
அதைத் தொடர்ந்து, நேற்று காலை பழனிசாமியை, அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.
அப்போது, 'கரூர் துயர சம்பவத்துக்கு பின்னணியில் தி.மு.க., தான் இருக்கிறது என்பதை, பா.ஜ., வெளியே எடுத்துச் சொல்லி அரசியல் செய்த அளவுக்கு, அ.தி.மு.க., செய்யவில்லை' என பைஜெயந்த் பாண்டா, பழனிசாமியிடம் வருத்தத்துடன் தெரிவித்து உள்ளார்.
அதை ஏற்க மறுத்த பழனிசாமி, 'முதன் முதலில் இந்த விஷயத்தை கையில் எடுத்து, கரூர் சம்பவத்தின் பின்னணியில் தி.மு.க., தான் உள்ளது.
குறிப்பாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் உள்ளார் என அரசியல் அரங்கு மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் குற்றச்சாட்டு உள்ளது.
கள்ளக்குறிச்சி துயர சம்பவத்துக்கு, மக்களை சந்தித்து ஆறுதல் கூறச் செல்லாத தமிழக முதல்வர் ஸ்டாலின், கரூருக்கு மட்டும் இரவோடு இரவாக வந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியது ஏன்?
சாபக் கேடு
'அதேபோல, துபாய்க்கு உல்லாசப் பயணம் போன தமிழக துணை முதல்வர் உதயநிதி, கரூர் சம்பவம் நடந்ததும், அவசர அவசரமாக துபாயில் இருந்து, தமிழகத்துக்கு சிறப்பு விமானம் வாயிலாக ஓடோடி வந்தார்.
கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின், அதே சிறப்பு விமானத்தில் துபாய்க்கு சென்று விட்டார். உல்லாசப் பயணம் போகும் நபரெல்லாம் துணை முதல்வர் ஆகி இருப்பது, தமிழகத்துக்கான சாபக் கேடு; துரதிருஷ்டம்.
இத்தனை பெரிய சம்பவம் நடந்த பின், கூடவே இருந்து ஆறுதல் சொல்லாததோடு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ளாதவரெல்லாம் துணை முதல்வரா? என நான் தான், தி.மு.க., தரப்பை கேள்வி மேல் கேள்வி கேட்டு, அரசுக்கும் முதல்வருக்கும் கடும் நெருக்கடி ஏற்படுத்தினேன்' என பழனிசாமி கூறியிருக்கிறார்.
பின், இரு தரப்பிலும் கரூர் விவகாரத்தை நீண்ட காலத்துக்கு அரசியல் ரீதியில் பிரசார ஆயுதமாக பயன்படுத்துவது என பேசி முடிவெடுத்தனர்.
சந்திப்பின் போது, கரூர் துயரச் சம்பவத்தால் தமிழக அரசியலில் ஏற்பட்டிருக்கும் திடீர் மாற்றங்கள், நடப்பு அரசியல் நிலவரம் குறித்து விரிவாக பேசிய அவர்கள், அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியில் மேலும் பல கட்சிகளை இணைப்பது, குறிப்பாக விஜயின் த.வெ.க.,வுடன் கூட்டணி அமைப்பது, பிரசார வியூகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசியதாக தெரிகிறது.
பங்கேற்பு
பின், வரும் சட்டசபை தேர்தலுக்கான தன் பிரசார பயணத்தை, வரும் 12ல் மதுரையில் இருந்து நாகேந்திரன் துவங்குகிறார்.
அதற்கு அழைப்பு விடுத்த பா.ஜ., தலைவர்கள், இக்கூட்டத்தில் அ.தி.மு.க., சார்பில் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பதோடு, அ.தி.மு.க., தொண்டர்களையும் அதிக அளவில் பங்கேற்க வைக்க வேண்டும் எனவும், பழனி சாமியிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
'கட்சியினருக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது; கட்சி நிர்வாகிகளுக்கு மீண்டும் அறிவுறுத்தப்படும்' என பழனிசாமி, பா.ஜ., பொறுப்பாளர்களிடம் கூறியுள்ளார்.
-- நமது நிருபர் -