கூட்டணி வாய்ப்புள்ள தலைவர்களை சந்திக்க பைஜெயந்த் பாண்டா திட்டம்
கூட்டணி வாய்ப்புள்ள தலைவர்களை சந்திக்க பைஜெயந்த் பாண்டா திட்டம்
ADDED : அக் 18, 2025 04:46 AM

சென்னை: பா.ஜ., கூட்டணி கட்சி தலைவர்களையும், கூட்டணிக்கு வர வாய்ப்புள்ள, கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்க, அக்கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில், சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் வியூகம், பிரசாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க, பா.ஜ., சார்பில் அக்கட்சியின் தேசிய துணைத் தலைவர் பைஜெயந்த் பாண்டா, மத்திய இணை அமைச்சர் முரளிதர் மோகல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் சென்னை வந்த பைஜெயந்த் பாண்டா, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை, அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற, பா.ம.க., நிறுவனர் ராமதாசையும் சந்தித்தார்.
இந்நிலையில் மீண்டும் சென்னை வந்துள்ள பைஜெயந்த் பாண்டா, நேற்று முன்தினம் இரவு, பா.ம.க., தலைவர் அன்புமணியை, சென்னை அக்கரையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.
இது தொடர்பாக பா.ம.க., நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா, கடந்த வாரம் சென்னை வந்தபோதே, அன்புமணியை சந்திக்க விரும்பினார். ஆனால் சூழல் அமையவில்லை. இப்போது இருவரும் சந்தித்து நடப்பு அரசியல், வரும் சட்டசபை தேர்தல் குறித்து பொதுவாக பேசினர்' என்றார்.
பா.ஜ., நிர்வாகிகள் கூறுகையில், 'முதல் கட்டமாக கூட்டணி கட்சி தலைவர்களையும், கூட்டணிக்கு வர வாய்ப்புள்ள கட்சி தலைவர்களையும் சந்தித்து, இணக்கமான சூழலை உருவாக்குமாறு, தேர்தல் பொறுப்பாளர்களை அமித் ஷா கேட்டுக் கொண்டுள்ளார்.
'அதன்படியே, அன்புமணியை பைஜெயந்த் பாண்டா சந்தித்துள்ளார். கடந்த லோக்சபா தேர்தலில், கூட்டணியில் இருந்த கட்சி என்பதால், இப்போதே பா.ஜ., கூட்டணியில் இணையுமாறு அன்புமணியிடம் அழைப்பு விடுத்தார்' என்றனர்.
அன்புமணியை தொடர்ந்து, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தே.மு.தி.க., பொதுச் செயலர் பிரேமலதா, புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோரையும், பைஜெயந்த் பாண்டா சந்திக்க உள்ளதாக பா.ஜ., வினர் தெரிவித்தனர்.