ஓட்டுச்சாவடியில் பூத் ஏஜன்ட் வெளியேற தடை: தி.மு.க., - அ.தி.மு.க., மா.செ.,க்கள் உத்தரவு
ஓட்டுச்சாவடியில் பூத் ஏஜன்ட் வெளியேற தடை: தி.மு.க., - அ.தி.மு.க., மா.செ.,க்கள் உத்தரவு
ADDED : ஏப் 19, 2024 01:14 AM

சேலம் தொகுதியில், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ம.க., போட்டியிடும் நிலையில், வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில், தி.மு.க., - அ.தி.மு.க., இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இடைப்பாடி, வீரபாண்டி, ஓமலுார் தொகுதிகளில் கனிசமான ஓட்டுகளை பா.ம.க., பெறும் என்பதால், தி.மு.க.,வை விட கணிசமான ஓட்டுகள் முன்னிலை பெற்று விடலாம் என அ.தி.மு.க., திட்டமிட்டுள்ளது.
இதே போல், சேலம் மேற்கு, வடக்கு, தெற்கு தொகுதிகளில், முன்னிலையை பெற்று விடலாம் என தி.மு.க., திட்டமிட்டுள்ளது.
இதனால், சேலத்தின் மூன்று தொகுதிகளில் ஓட்டுகளை பெறும் கட்சியே வெற்றி பெறும் என்பதால், இந்த மூன்று தொகுதிகளையும் இரண்டு கட்சிகளும் விழிப்புடன் பணியாற்ற நிர்வாகிகளுக்கு தலைமை உத்தரவிட்டுள்ளது.
இதன் காரணமாக சேலம் மேற்கு, தெற்கு, வடக்கு தொகுதிகளில் ஓட்டுப்பதிவை உன்னிப்புடன் கவனிக்க பூத் ஏஜன்டுகளுக்கு இரண்டு கட்சிகளின் மாவட்ட செயலர்களும் உத்தரவிட்டுள்ளனர்.
அங்கம்மாள் காலனியில் உள்ள அ.தி.மு.க., கட்சி அலுவலகத்தில் நேற்று மாவட்ட செயலர் வெங்கடாஜலம் தலைமையில் தொகுதி பொறுப்பாளர்கள், பகுதி செயலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
அதில், அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் எதிர்க்கட்சியினர் ஓட்டுக்களை போடக் கூடும் என்பதால், எக்காரணம் கொண்டும் பூத் ஏஜன்டுகள் ஓட்டுப்பதிவு துவங்கியது முதல் கடைசியாக ஓட்டு பெட்டி துாக்கி வாகனத்தில் ஏற்றும் வரை ஓட்டுப்பதிவு அறையிலேயே இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வெளியேற கூடாது மாவட்ட செயலர் எச்சரித்தார்.
இதே போல், தி.மு.க., மாநகர மாவட்ட செயலர் ராஜேந்திரன், நிர்வாகிகளை போனில் அழைத்து, 'தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்கி, பெட்டி துாக்கி வாகனத்தில் ஏற்றும் வரை எந்த பூத் ஏஜன்டும் வெளியே செல்லக் கூடாது.
அவர்களை கவுன்சிலர்கள், வட்டச் செயலர்கள் கண்காணிக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
தி.மு.க.,- அ.தி.மு.க., தலைமை அறிவுறுத்தலின் படி, தமிழகம் முழுதும் இரு கட்சிகளின் மாவட்ட செயலர்கள், பூத் ஏஜன்டுகள் ஓட்டுப்பதிவு மையத்தில் இருந்து வெளியேற தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.
-நமது நிருபர்-

