தமிழகத்தில் பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிவு: 2023ஐ விட 2024ல் 6.09 சதவீதம் குறைவு
தமிழகத்தில் பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிவு: 2023ஐ விட 2024ல் 6.09 சதவீதம் குறைவு
UPDATED : ஆக 03, 2025 02:30 AM
ADDED : ஆக 03, 2025 12:58 AM

தமிழகத்தில் பிறப்பு விகிதம், 2023ம் ஆண்டை ஒப்பிடுகையில், 2024ல், 6.09 சதவீதம் குறைந்துள்ளது.
தற்போது, 150 கோடி மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. 2026ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போதுள்ள மக்கள் தொகை குறையாமல், அதே அளவு நீடிப்பதற்கு குழந்தை பிறப்பு விகிதம் 2.10 சதவீதமாக இருக்க வேண்டும். ஆனால், குழந்தை பிறப்பு விகிதம் இந்திய அளவில், 1.90 சதவீதமாகவும், தமிழகத்தில், 1.40 சதவீதமாகவும் உள்ளது.
கடந்த, 2021ல், மொத்தம், 9 லட்சத்து, 12,869 பேரும், 2022ல், மொத்தம், 9 லட்சத்து, 36,361 பேரும், 2023ல், மொத்தம், 9 லட்சத்து, 2,329 பேரும், 2024ல், மொத்தம் 8 லட்சத்து, 47,668 பேரும் பிறந்துள்ளனர்.
கடந்த ஐந்தாண்டுகளில், கொரோனா ஊரடங்கு காரணமாக, 2022ல் மட்டும் -கூடுதலாக பிறப்பு விகிதம் இருந்துள்ளது. மற்ற ஆண்டுகளில் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. 2023ஐ ஒப்பிடுகையில், 2024ம் ஆண்டு, 54,661 குழந்தைகள் குறைவாக பிறந்துள்ளனர். அதாவது, 6.09 சதவீதம் குழந்தை பிறப்பு குறைந்துள்ளது. இதுமட்டுமின்றி, ஆண்களை விட பெண் குழந்தைகள் பிறப்பு விகிதமும் குறைவாக உள்ளது.
பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் கூறுகையில், 'தமிழக அளவில் கு ழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. காரணம், பலரும் தங்கள் பொருளாதார நிலை, கல்விக் கட்டணம், மருத்துவ செலவு உள்ளிட்ட காரணங்களால், ஒரு குழந்தையுடன் நிறுத்திக் கொள்வதால், குழந்தை பிறப்பு கணிசமாக குறைந்துள்ளது' என்றனர்.
தமிழக குழந்தைகள் பிறப்பு பட்டியல்
குழந்தைகள் பிறப்பு
ஆண்டு ஆண்கள் பெண்கள் இதரர் மொத்தம்
2020 4,76,054 4,48,171 31 9,24,256
2021 4,70,043 4,42,797 29 9,12,869
2022 4,82,531 4,53,801 29 9,36,361
2023 4,65,063 4,37,249 17 9,02,329
2024 4,37397 4,10,241 30 8,47,668
* குறிப்பு: கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாக, 2022ல் பிறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
- நமது நிருபர் -