தீபாவளிக்கு குவிகிறது பிரியாணி 'ஆர்டர்': விற்பனை ரூ.250 கோடியை எட்ட வாய்ப்பு
தீபாவளிக்கு குவிகிறது பிரியாணி 'ஆர்டர்': விற்பனை ரூ.250 கோடியை எட்ட வாய்ப்பு
UPDATED : அக் 17, 2025 11:44 AM
ADDED : அக் 17, 2025 11:39 AM

சென்னை: புரட்டாசி மாதம் முடிவு, தீபாவளி கறி விருந்து உள்ளிட்ட காரணங்களால், வரும் தீபாவளிக்கு பிரியாணி சாப்பிட, உணவகங்களில் பலரும் முன்பதிவு செய்து வருகின்றனர். இதனால், தமிழகத்தில் தீபாவளி பிரியாணி விற்பனை மதிப்பு, 250 கோடி ரூபாயை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் கிராமம் முதல் நகரம் வரை, பாரம்பரிய அசைவ உணவாக, சாதம், ஆட்டுக்கறி குழம்பு இருந்தது. குறிப்பாக, தீபாவளிக்கு வீடுகளில் காலையில் இட்லி, ஆட்டுக்கறி குழம்பு, மதியம் சாதம் ஆட்டுக்கறி குழம்பு, ஆட்டுக்கறி சுக்கா என, அசைவ விருந்து சாப்பிடுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக, சென்னையில் முதன்மையான அசைவ உணவாக பிரியாணி மாறியுள்ளது. தற்போது, சென்னை, கோவை போன்ற நகரங்கள் மட்டுமின்றி, தமிழகம் முழுதும் பிரியாணிக்கு மக்கள் அடிமையாகி விட்டனர் .
சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில், பாசுமதி அரிசி மட்டன், சிக்கன் பிரியாணி; மற்ற மாவட்டங்களில் சீரக சம்பா அரிசி பிரியாணி விற்பனை அதிகம் உள்ளது. களைகட்டுகிறது குறிப்பாக சீரக சம்பா அரிசி பிரியாணியில், ஆம்பூர், திண்டுக்கல், கொங்கு என, பல வகையான பிரியாணி விற்கப்படுகிறது. மக்கள் தங்களுக்கு பிடித்த பிரியாணியை விரும்பி வாங்குகின்றனர். வீடுகளில் சமைத்தால், பிரியாணி சுவை தெரிவதில்லை என்பதால், அசைவ உணவகங்களில் சாப்பிடுகின்றனர்.
மேலும், ஒரு கிலோ, 2 கிலோ என, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, 'ஆர்டர்' கொடுத்து வாங்கி, வீட்டில் சாப்பிடுகின்றனர். இதனால், முறைப்படுத்தப்பட்ட மற்றும் முறைப்படுத்தப்படாத பிரிவில், அனைத்து அசைவ உணவகங்களிலும், பிரியாணி விற்பனை களைகட்டுகிறது. சென்னையில் ஆண்டுக்கு சராசரியாக, 5,500 கோடி ரூபாய், தமிழகம் முழுதும், 11,000 கோடி ரூபாய்க்கு பிரியாணி வியாபாரம் நடக்கிறது.
தற்போது, புரட்டாசி மாதம் என்பதால், அசைவ பிரியர்களும், அசைவத்துக்கு பதில், சைவ உணவு வகைகளை சாப்பிட்டு வருகின்றனர்.
புரட்டாசி மாதம் இன்றுடன் முடிய உள்ள நிலையில், ஹிந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி வரும் 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. முன்பதிவு எனவே, தீபாவளிக்கு பிரியாணியை வெளுத்து கட்ட, பிரபலமான அசைவ உணவகங்களில் பலரும் முன்பதிவு செய்து வருகின்றனர். அதற்கேற்ப, ஒவ்வொரு உணவகமும், மட்டன், சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, மட்டன் சுக்கா என, இரண்டு நபர், நான்கு நபர், ஆறு நபர், 12 நபர் சாப்பிடும் வகையில், பல்வேறு தொகுப்புகளில், பிரியாணி விற்க ஆர்டர்களை பெறுகின்றன.
இதனால், தீபாவளிக்கு பிரியாணி விற்பனை, 250 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து, 'ஜூனியர் குப்பண்ணா' நிறுவனத்தின் இயக்குநர் பாலச்சந்தர் கூறியதாவது: தீபாவளிக்கு வீடுகளில் கறி விருந்து என்பது தொன்று தொட்டு உள்ளது. தமிழகத்தில் வழக்கமாக, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில், பிரியாணி விற்பனை மதிப்பு, சராசரியாக 120 கோடி ரூபாயாக உள்ளது.
புரட்டாசி என்பதால், கடந்த ஒரு மாதமாக, அசைவம் சாப்பிடாமல் இருந்தவர்களும், புரட்டாசி முடிவடைவதால், தீபாவளிக்கு பிரியாணி சாப்பிட விருப்பமாக உள்ளனர். எனவே, தீபாவளிக்கு பிரியாணி வாங்க உணவகங்களில் முன்பதிவு செய்கின்றனர். இதனால், வரும் சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்கள் தீபாவளி பிரியாணி விற்பனை, 250 கோடி ரூபாயாக அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.