பா.ஜ., கூட்டணியா அல்லது த.வெ.க.,வா? அமித் ஷா முடிவுக்காக காத்திருக்கும் பன்னீர்
பா.ஜ., கூட்டணியா அல்லது த.வெ.க.,வா? அமித் ஷா முடிவுக்காக காத்திருக்கும் பன்னீர்
ADDED : டிச 04, 2025 05:47 AM

அ.தி.மு.க., - - பா.ஜ., கூட்டணியில் இடம் கிடைக்குமா என்பதை உறுதிப்படுத்துமாறு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பின், பன்னீர்செல்வம் பா.ஜ., தலைமையுடன் நல்ல நட்பில் இருந்து வருகிறார். பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதால் தான், பழனிசாமியை முதல்வராக ஏற்று, துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டேன் என வெளிப்படையாகவே பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
வலியுறுத்தல்
ஆனால், அ.தி.மு.க., பொதுச்செயலராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பின், கட்சியில் இருந்து வெளியேறும் நிலைக்கு பன்னீர்செல்வம் தள்ளப்பட்டார். மத்தியில் ஆளும் பா.ஜ., ஆதரவு இருந்தும், அவரால் அ.தி.மு.க., தலைமை பொறுப்புக்கு வர முடியவில்லை. கடந்த லோக்சபா தேர்தல் தோல்வியை தொடர்ந்து, வரும் சட்டசபை தேர்தலுக்காக, அ.தி.மு.க.,வுடன் பா.ஜ., கூட்டணி அமைத்து உள்ளது.
பன்னீர்செல்வம் மற்றும் தினகரனை கூட்டணியில் சேர்க்க, பா.ஜ., தலைமை வலியுறுத்தியும், பழனிசாமி மறுத்து வருகிறார். இதனால், பா.ஜ., உடனான உறவை பன்னீர்செல்வம் முறித்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து, தான் நடத்தி வந்த அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை, அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் என, பன்னீர்செல்வம் பெயர் மாற்றினார்.
பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், 'தனிக்கட்சி துவங்கி, த.வெ.க., அல்லது தி.மு.க.,வு டன் கூட்டணி வைக்க வேண்டும்' என வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் பன்னீர்செல்வம் டில்லி சென்றார். கடந்த இரு நாட்களாக அங்கு முகாமிட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியுள்ளார்.
இதுகுறித்து, பன்னீர்செல்வம் ஆதரவாளர் கூறியதாவது: அ.தி.மு.க.,வில் மட்டுமல்ல, கூட்டணியில் சேர்க்கவும் பழனிசாமி மறுத்து வருகிறார். ஆனால், பொறுமையாக இருங்கள்; கூட்டணியில் உங்களுக்கான தொகுதிகளை பெற்றுத் தருகிறோம் என பா.ஜ., தலைமை கூறி வருகிறது.
விரைவில் நல்ல முடிவு
இதையடுத்து, டில்லியில் அமித் ஷாவை சந்தித்து, பா.ஜ., கூட்டணியில் இடம் கிடைக்குமா என்பதை பழனிசாமியிடம் பேசி, இப்போதே உறுதிப்படுத்துங்கள்; இல்லையெனில், எங்களை விட்டு விடுங்கள் என கூறியுள்ளார். டிசம்பருக்குள் முடிவு எட்டப்படாவிட்டால், பன்னீர்செல்வம் தலைமையில் உருவாக்கப்படும் கட்சி, த.வெ.க., அல்லது தி.மு.க., உடன் கூட்டணி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை திரும்பிய பன்னீர்செல்வம் கூறுகையில், ''டில்லியில் அமித் ஷாவை சந்தித்து, அரசியல் நிலவரம் குறித்து பேசினேன். நல்ல முடிவு விரைவில் வரும்,'' என்றார்.
-- நமது நிருபர் -

