பீஹாரில் பா.ஜ., கூட்டணி அபார வெற்றி: காங்., உள்ளிட்ட தி.மு.க., கூட்டணி கட்சிகள் கலக்கம்
பீஹாரில் பா.ஜ., கூட்டணி அபார வெற்றி: காங்., உள்ளிட்ட தி.மு.க., கூட்டணி கட்சிகள் கலக்கம்
ADDED : நவ 15, 2025 12:52 AM

'பீஹாரில் பா.ஜ., கூட்டணியின் அபார வெற்றியால், வரும் சட்டசபை தேர்தலில் தங்களுக்கான தொகுதிகள் குறைந்து விடும்' என, காங்கிரஸ் உள்ளிட்ட தி.மு.க.,வின் கூட்டணி கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன.
பீஹார் சட்டசபை தேர்தலில், பா.ஜ., கூட்டணி 200 தொகுதிகளை தாண்டி அபார வெற்றி பெற்றுள்ளது; 'இண்டி' கூட்டணி படுதோல்வி அடைந்துள்ளது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில், ஆர்.ஜே.டி.,- 143, காங்கிரஸ் 61 தொகுதிகளில் போட்டியிட்டன. மற்ற தொகுதிகளில் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பிற கட்சிகள் போட்டியிட்டன.
கடந்த 2020ல், 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 19ல் வென்றது. இதனால், இந்த முறை குறைந்தது 75 தொகுதிகள் வேண்டும் என அடம் பிடித்தது. ராகுல் யாத்திரை நடத்தி இருப்பதால், காங்கிரசின் செல்வாக்கு அதிகரித்துள்ளது என அக்கட்சியினர் வாதிட்டனர். இதனால், வேட்பு மனு தாக்கல் முடிந்த பிறகும்கூட, தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய முடியாமல் தடுமாறியது இண்டி கூட்டணி.
போராடி 61 தொகுதிகளை பெற்ற காங்கிரஸ், வெறும் ஐந்து தொகுதிகளில் மட்டுமே வென்றது. இதனால், பீஹார் காங்கிரசாரை விட, தமிழக காங்கிரசார் அதிகம் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழக சட்டசபைக்கு, இன்னும் நான்கு மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தி.மு.க., கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கடந்த 2021ல் 25 தொகுதிகளில் போட்டியிட்டு, 18ல் வென்றது. வரும் சட்டசபை தேர்தலில், 125 தொகுதிகள் வேண்டும் என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் பேசி வருகிறார். 'கடந்த 2011ல் போட்டியிட்ட 63 தொகுதிகள் அல்லது 2016ல் போட்டியிட்ட 41 தொகுதிகளை கண்டிப்பாக பெறுவோம்' என, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நம்பிக்கையுடன் வலியுறுத்தி வருகின்றனர்.
தி.மு.க.,விடம் அதிக தொகுதிகளை பெறுவதற்காக, நடிகர் விஜயின் த.வெ.க.,வுடன் காங்கிரஸ் இணக்கம் காட்டி வந்தது. விஜயை தி.மு.க., கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், காங்கிரசிடம் இருந்து, விஜய்க்கு எதிராக ஒரு வார்த்தை கூட வரவில்லை. 'அதிக தொகுதிகளை தராவிட்டால், விஜய் பக்கம் சென்று விடுவோம்' என, தி.மு.க.,விடம் சொல்லாமல் சொல்லி வந்தது காங்கிரஸ்.
ஆனால், பீஹார் தேர்தல் முடிவுகள், அனைத்தையும் புரட்டிப் போட்டுள்ளன. கூட்டணி பலம் இருந்தும், காங்கிரசால் வெற்றி பெற முடியவில்லை. பீஹார் தோல்விக்கு, காங்கிரசின் தகுதிக்கு மீறிய ஆசையும் ஒரு காரணம் என பலரும் விமர்சித்து வருகின்றனர். இதனால், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியில் கடந்த 2021ல் போட்டியிட்ட 25 தொகுதிகளுக்கு மேல் கேட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பீஹாரை காரணம் காட்டி, 25ல் சில தொகுதிகளை தி.மு.க., குறைத்து விடுமோ என்ற அச்சம் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளது. அது போலவே, அதிக தொகுதிகளை எதிர்பார்த்துள்ள வி.சி., - ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகளும், பீஹாரை சொல்லியே தி.மு.க., தலைமை தொகுதிகளை குறைத்து விடுவர் என கலக்கம் அடைந்துள்ளன.
***
- நமது நிருபர் -

