தமிழக பா.ஜ., வேட்பாளர் பட்டியல்: இம்மாதம் வெளியிட திட்டம்
தமிழக பா.ஜ., வேட்பாளர் பட்டியல்: இம்மாதம் வெளியிட திட்டம்
UPDATED : பிப் 14, 2024 04:28 AM
ADDED : பிப் 14, 2024 01:14 AM

சென்னை: பா.ஜ., தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை, லோக்சபா தேர்தல் பணியில் முழுவீச்சில் ஈடுபடுத்தி, இம்மாத இறுதியில் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட, அக்கட்சி திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, டில்லியில் வரும், 17, 18ல் மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
பிரதமர் மோடி, வரும் 25ம் தேதி, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இதனால் தொண்டர்கள், நிர்வாகிகள் உற்சாகம் அடைவர். அந்த உற்சாகத்தை தேர்தல் வரை நீட்டிக்க செய்ய, தமிழக பா.ஜ., வேட்பாளர்கள் பட்டியலை, முன்கூட்டியே வெளியிட திட்டமிட்டு வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு உள்ளது.
இதற்கிடையில், வரும் 17, 18ல் பா.ஜ., தேசிய செயற்குழு, பொதுக்குழு கூட்டம் டில்லியில் நடக்கிறது. அதில், தமிழக பா.ஜ., மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
அந்த கூட்டத்தில் பங்கேற்கும் அண்ணாமலை, மேலிட தலைவர்களுடன் வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசிக்கிறார். அதை தொடர்ந்து, வேட்பாளர்களை இறுதி செய்து, இம்மாத இறுதிக்குள் அறிவிக்க பா.ஜ., திட்டமிட்டு உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

