சொத்து விபரங்கள் மறைப்பு: பிரியங்கா மீது பா.ஜ., புகார்
சொத்து விபரங்கள் மறைப்பு: பிரியங்கா மீது பா.ஜ., புகார்
ADDED : அக் 27, 2024 01:15 AM

புதுடில்லி: கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதிக்கு நடைபெறும் இடைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா, தன்னுடைய மற்றும் தன் கணவரின் சொத்து விபரங்களை முழுமையாக வெளியிடாமல் மறைத்துள்ளார் என, பா.ஜ., குற்றஞ்சாட்டியுள்ளது.
கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதிக்கு, நவ., 13ல் இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் காங்கிரஸ் சார்பில், சோனியாவின் மகள் பிரியங்கா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அவர் தன் வேட்பு மனுவில், தன்னுடைய மற்றும் தன் கணவர் ராபர்ட் வாத்ராவின் சொத்துக்கள் குறித்த விபரங்களை மறைத்துள்ளதாக, பா.ஜ., கூறியுள்ளது.
இதுகுறித்து பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா நேற்று கூறியதாவது:
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தன்னுடைய மற்றும் தன் குடும்பத்தார் குறித்த சொத்து விபரங்களை தெரிவிக்க வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு.
சோனியா குடும்பம் சட்டத்துக்கு அப்பாற்பட்டது அல்ல. வேட்பு மனுவில் முழுமையான தகவல் தெரிவிக்காவிட்டால், தேர்தலில் போட்டியிடும் உரிமையை இழப்பர்.
பிரியங்கா தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில், தன்னுடைய மற்றும் தன் கணவரின் முழு சொத்து விபரம், வருவாய் விபரங்களை தெரிவிக்காமல் மறைத்துள்ளனர்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையில், சில அறக்கட்டளைகள் வாயிலாக கிடைத்துள்ள தன் வருவாயை பிரியங்கா மறைத்துள்ளார்.
அதுபோலவே, வாத்ராவுக்கு சில நிறுவனங்கள் வாயிலாக கிடைத்துள்ள வருவாயை மட்டும் கணக்கு காட்டியுள்ளார்.
அதே நேரத்தில் இரண்டு நிறுவனங்கள் வாயிலான வருவாயை மறைத்துள்ளார்.
இதுகுறித்து, பிரியங்கா மற்றும் காங்கிரஸ் விளக்கம் அளிக்க வேண்டும். சட்டத்தை புறக்கணித்து, மக்களை ஏமாற்றலாம் என்று அவர்கள் நினைக்கின்றனர். ஆனால், அதை நாங்கள் முறியடிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வேட்பு மனுக்கள் நாளை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.