கோட்சே வழியில் பயணிக்கும் பா.ஜ.,:காங்கிரஸ் சித்தராமையா குற்றச்சாட்டு
கோட்சே வழியில் பயணிக்கும் பா.ஜ.,:காங்கிரஸ் சித்தராமையா குற்றச்சாட்டு
UPDATED : ஜன 22, 2025 01:26 PM
ADDED : ஜன 22, 2025 01:37 AM

பெலகாவி:''மஹாத்மா காந்தி ராம பக்தர். அவரை பா.ஜ., குடும்பத்தைச் சேர்ந்த கோட்சே படுகொலை செய்தார். நாங்கள் மகாத்மா காந்தியின் ஹிந்துத்வாவை நம்புகிறோம். ஆனால், பா.ஜ., குடும்பம் கொலைகார கோட்சேயின் சித்தாந்தத்தை பின்பற்றுகிறது,'' என, கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசியது, சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கர்நாடக மாநிலம், பெலகாவியில், 1924ல் நடந்த காங்., மாநாட்டில், கட்சியின் தலைவராக மஹாத்மா காந்தி தேர்வு செய்யப்பட்டார். அதன் 100 ஆண்டு நிறைவை ஒட்டி, பெலகாவியில் நேற்று காங்கிரஸ் மாநாடு நடந்தது. பெலகாவி சுவர்ண விதான் சவுதா அருகே பிரமாண்ட காந்தி சிலை திறக்கப்பட்டது.
கட்சியின் தேசிய பொதுச்செயலரும், வயநாடு காங்கிரஸ் எம்.பி.,யுமான பிரியங்கா, பொதுச்செயலர் வேணுகோபால், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் முதல்வர் சித்தராமையா பேசியதாவது:
இன்று நம் முன் இருக்கும் பெரிய சவால்கள் பா.ஜ.,வும் - ஆர்.எஸ்.எஸ்.,சும் தான். இவர்களின் சித்தாந்தத்திற்கு எதிராக நாம் அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும். ஆர்.எஸ்.எஸ்.,சின் கைக்கூலியாக பா.ஜ., வேலை செய்கிறது.
மஹாத்மா காந்தி ராம பக்தர்; துாய இதயம் கொண்ட ஹிந்து. அவரை பா.ஜ., குடும்பத்தைச் சேர்ந்த கோட்சே படுகொலை செய்தார். நாங்கள் மஹாத்மா காந்தியின் ஹிந்துத்வாவை நம்புகிறோம்.
ஆனால், பா.ஜ., குடும்பம் கொலைகார கோட்சேயின் சித்தாந்தத்தை பின்பற்றுகிறது. காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது, 'ஹே ராம்' என்றபடியே இறந்தார். ஹிந்து - முஸ்லிம்கள் சகோதரர்களாக வாழ வேண்டும் என்பதே அவரது விருப்பம்.
இவ்வாறு அவர் பேசினார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், ''காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேயை, பிரதமர் மோடி வணங்குகிறார். பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு எதிராக போராடும் ஆற்றல் கொண்ட பெண் பிரியங்கா. அவர் பார்ப்பதற்கு மென்மையாக இருக்கலாம். அப்பா இல்லாமல் வளர்ந்தாலும் அந்த குறையை வெளிக்காட்டாமல் வளர்ந்தவர். யாருக்கு அஞ்சாதவர்,'' என்றார்.
காங்., பொதுச்செயலர் பிரியங்கா பேசும்போது, ''அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க, தன் உயிரையும் தியாகம் செய்யத் தயாராக இருப்பதாக ராகுல் கூறி உள்ளார்.
அரசியலமைப்பு சட்டத்தை மாற்றும் முயற்சிக்கு எதிராக, லோக்சபாவில் ராகுல் குரல் எழுப்பும்போது, அவருக்கு பயந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.,க்கள் இடையூறு ஏற்படுத்துகின்றனர். ராகுல் மீது பல மாநிலங்களில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
''உண்மையை பேச விடாமல் தடுக்க பார்க்கின்றனர். நாங்கள் பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., போன்று கோழைகள் இல்லை. தியாகிகளாக உயிர் தியாகம் செய்ய தயார். நான்கு சுவர்களுக்குள் இருந்து மன்னிப்பு கடிதம் எழுத மாட்டோம்,'' என்றார்.