கூட்டணியில் கட்சிகளை சேர்க்கும் பணி; 'கறார்' பழனிசாமியிடம் ஒப்படைத்த பா.ஜ.,
கூட்டணியில் கட்சிகளை சேர்க்கும் பணி; 'கறார்' பழனிசாமியிடம் ஒப்படைத்த பா.ஜ.,
ADDED : ஜன 15, 2026 04:03 AM

தமிழக சட்டசபை தேர்தலுக்கு, தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்க்கும் பணியை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வசம், பா.ஜ., மேலிடம் ஒப்படைத்து விட்டு ஒதுங்கிக் கொண்டது.
சிறிய கட்சிகளின் தலைவர்கள், பா.ஜ., மேலிடத் தலைவர்களை சந்தித்து, அதிக தொகுதிகள் கேட்பதால், அந்த கட்சிகளின் பலம், தலைவர்களின் நெளிவு, சுளிவுகள் பழனிசாமிக்கு தெரியும் என்பதால், இந்த முடிவை பா.ஜ., எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
யாருடன் கூட்டணி?
இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. இந்த தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ், வி.சி., மார்க்சிஸ்ட், இ.கம்யூனிஸ்ட் - ம.தி.மு.க., - கொ.ம.தே.க., உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.
அ.தி.மு.க., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், பா.ஜ., - அன்புமணி பா.ம.க., - புதிய நீதி கட்சி - த.மா.கா., இந்திய ஜனநாயக கட்சி போன்றவை உள்ளன.
யாருடன் கூட்டணி என்பதை, தே.மு.தி.க., மற்றும் பல சிறிய கட்சிகள் இன்னும் அறிவிக்காமல் உள்ளன. தற்போதைய நிலவரப்படி, தி.மு.க., - அ.தி.மு.க., - த.வெ.க., நாம் தமிழர் கட்சி என, நான்கு முனை போட்டி ஏற்படுவது உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈடுபட்டார். அவரது தரப்பில், தமிழகத்தில் உள்ள சில கட்சிகளின் தலைவர்களுடன், தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சு நடத்தப்பட்டது.
அதன் தலைவர்கள், டில்லியில் பா.ஜ., மேலிடத் தலைவர்களை சந்தித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர, இரட்டை இலக்கத்தில் தொகுதி உட்பட தங்களின், 'எதிர்பார்ப்புகளை' தெரிவித்துள்ளனர். இது குறித்த விபரங்களை, உளவுப்பிரிவினர் வாயிலாகவும், தமிழகத்தில் உள்ள தனக்கு நெருக்கமானவர்கள் வாயிலாகவும் அமித் ஷா கேட்டுள்ளார்.
அதற்கு அவரது ஆதரவாளர்கள், 'தமிழகத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., மட்டுமே, மாநிலம் முழுதும் கிளை அளவில், நிர்வாக அமைப்பை கொண்ட பெரிய கட்சிகள். 'சிலர் தங்கள் சமூக ஓட்டுகளை வைத்து கட்சி நடத்துகின்றனர். அவர்கள், தேர்தல் சமயத்தில் தங்களை, 'கவனிக்கும்' கட்சிகளுடன், கூட்டணியில் சேர விருப்பமாக உள்ளனர்.
பேசி முடிக்கும் திறன்
'எனவே, ஒவ்வொரு கட்சியின் பலம் என்ன, அதற்கு எந்த பகுதியில் ஓட்டு உள்ளது, அக்கட்சிகளின் தலைவர்களின் நெளிவு, சுளிவு விபரங்கள், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு நன்றாக தெரியும்.
'தேசிய ஜனநாயக கூட்டணியில், புதிய கட்சிகளை சேர்ப்பது தொடர்பான முடிவுகளை, பழனிசாமியிடம் ஒப்படைப்பது நல்லது. அதேபோல, எல்லா கட்சிகளிடமும் கறாராக பேசி, தொகுதி பங்கீட்டை முடிக்கும் திறன் பழனிசாமியிடம் உள்ளது' என, தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்க்கும் முடிவை, பழனிசாமி வசம் பா.ஜ., மேலிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டது. டில்லியில் தங்களை சந்தித்த கட்சிகளின் தலைவர்களிடம், 'கூட்டணியில் சேர பழனிசாமியை சந்தித்து பேசவும்' என தெரிவித்து உள்ளனர். இதையடுத்து, தே.மு.தி.க.,வை கூட்டணியில் சேர்ப்பதற்கான பேச்சில், அ.தி.மு.க., தலைமையே ஈடுபட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது நிருபர் -

