அதிரடியாக பா.ஜ., திரட்டும் 'பைல்ஸ்-3' ஆவணங்கள்: பதற்றத்தில் தமிழக ஒப்பந்ததாரர்கள்!
அதிரடியாக பா.ஜ., திரட்டும் 'பைல்ஸ்-3' ஆவணங்கள்: பதற்றத்தில் தமிழக ஒப்பந்ததாரர்கள்!
ADDED : டிச 20, 2024 06:19 AM

தமிழக பா.ஜ., தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றுக் கொண்ட பின், தி.மு.க., முக்கிய பிரமுகர்கள், தமிழக அமைச்சர்கள் ஊழல் பட்டியலை ஆதாரங்களுடன் வெளியிட்டு வருகிறார்.
ஏற்கனவே, 'பைல்ஸ் -1, பைல்ஸ் - 2' என இரண்டு பட்டியல்களை வெளியிட்டிருக்கும் அண்ணாமலை, அடுத்தக்கட்டமாக, 'பைல்ஸ் - 3' வெளியிடத் தயாராகி கொண்டிருக்கிறார். 'வரும் புத்தாண்டில் அதை வெளியிடுவேன்' என்றும், சமீபத்தில் அவர் அறிவித்தார். இதையடுத்து, தமிழகம் முழுதும் அனைத்துத் துறைகளிலும் நடைபெற்ற ஊழல்கள் குறித்த விபரங்களை, அண்ணாமலையால் இதற்கென்றே அமைக்கப்பட்டிருக்கும் சிறப்பு குழு திரட்டிக் கொண்டிருக்கிறது. ஆங்காங்கே இருக்கும் பா.ஜ., முக்கிய பிரமுகர்களும், விபரங்களை திரட்டிக் கொண்டிருக்கின்றனர்.
இதற்கிடையில், இந்த விபரங்கள் வெளியே கசிந்துவிட, திரட்டப்படும் பட்டியலில் தங்கள் பெயரோ, நிறுவனமோ இருக்கின்றதா என்பதை அறிய, தமிழகம் முழுதும் இருக்கும் கான்ட்ராக்டர்கள், பா.ஜ.,வில் இருக்கும் பெரும் தலைகள் வாயிலாக முயற்சிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: தமிழகத்தின் பொதுப்பணித் துறை, உள்ளாட்சித் துறை, சுகாதாரத் துறை, மீன் வளத்துறை, சமூகநலத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் வாயிலாக, ஏராளமான மக்கள்நலத் திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கு இத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. திட்டங்கள் அரசு தரப்பில் தீட்டப்பட்டாலும், அதை முழுமைப்படுத்தி செயல்பாட்டுக்கு கொண்டு வரும் பொறுப்பு தனியார் ஒப்பந்ததாரர்களுக்கே வழங்கப்படுகிறது.
குறிப்பாக, நெடுஞ்சாலைத் துறை என்றால், அதன் வாயிலாக போடப்படும் அனைத்து சாலைகளும், தனியார் ஒப்பந்ததாரர்களுக்கே வழங்கப்படுகின்றன. அதேபோல, பொதுப்பணித் துறை வாயிலாக, தமிழகம் முழுதும் அரசுத் துறைகளுக்கான அனைத்து கட்டுமான வேலைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. அத்துறை அதிகாரிகள், கட்டுமானத்தை மேற்கொள்ளும் பணியை தனியார் ஒப்பந்ததாரர்களிடமே அளிக்கின்றனர்.
சமூகநலத் துறையில் மேற்கொள்ளப்படும் அனைத்து திட்டங்களிலும், தனியார் ஒப்பந்ததாரர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். இப்படி தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு பணி வழங்குவதற்காக, அரசுத் துறை அதிகாரிகளும், அமைச்சர்களும் ஏகப்பட்ட பணத்தை லஞ்சமாக பெறுகின்றனர். இதனாலேயே தரமில்லாத பணிகள் நடக்கின்றன. அமைச்சர்களைக் கடந்தும், ஒப்பந்ததாரர்கள் அளிக்கும் லஞ்சப் பணம் பயணிக்கிறது.
இதற்கெல்லாம் கடிவாளம் போட வேண்டும் என்பதற்காகத்தான், ஊழல்களுக்கான ஆதாரங்களை சேகரித்து, தொடர்ச்சியாக 'பைல்ஸ்' என்ற பெயரில் வெளியிட்டு வருகிறார் அண்ணாமலை. வரும் புத்தாண்டில் வெளியிடவிருக்கும் 'பைல்ஸ் -- 3'க்கு ஆதாரம் மற்றும் ஆவணங்களை திரட்டும் பணி, தமிழகம் முழுக்க துரிதமாக நடந்து வருகிறது. இதனால், தமிழக முழுதும் இருக்கும் ஒப்பந்ததாரர்கள் பலரும் பதற்றம் அடைந்து உள்ளனர்.
அண்ணாமலை திரட்டும் ஆதாரங்களில் தங்கள் பெயர் இடம் பெற்று இருக்கிறதா என்பதை அறிய படாதபாடுபடுகின்றனர். இதற்காக, அண்ணாமலைக்கு நெருக்கமானவர்கள், பா.ஜ., தலைவர்கள் வாயிலாக தகவல் திரட்டும் முயற்சியில் உள்ளனர். இதை அறிந்த அண்ணாமலை, 'தகவல்கள் எக்காரணம் கொண்டும் வெளியில் கசிந்துவிடக் கூடாது' என, ஊழல் தகவல் திரட்டுவோருக்கும், விபரங்கள் அறிந்த கட்சி முன்னணியினருக்கும் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -