திராவிட கட்சிகள் பாணியில் 'கவனிப்பில்' இறங்கும் பா.ஜ.,
திராவிட கட்சிகள் பாணியில் 'கவனிப்பில்' இறங்கும் பா.ஜ.,
ADDED : ஜூலை 11, 2025 02:11 AM

சென்னை: சட்டசபை தேர்தலுக்கு கட்சியினரை தயார்படுத்த, திராவிட கட்சிகளின் பாணியில், 'பூத்' கமிட்டி நிர்வாகிகளை, 'கவனிக்கும்' பணியில், தமிழக பா.ஜ.,வும் ஈடுபட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்களே உள்ளன. ஆளுங்கட்சியான தி.மு.க., சார்பில், ஒவ்வொரு மாவட்டத்திலும், பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டு, அதில் பங்கேற்போருக்கு அறுசுவை உணவுடன், 'கவனிப்பு' நடக்கிறது.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 68,000 பூத்களில், பா.ஜ.,வுக்கு 50,000க்கும் அதிகமான, பூத் கமிட்டிகள் உள்ளன. ஒரு கமிட்டியில், 12 பேர் உள்ளனர்.
தேர்தலுக்காக பூத் கமிட்டியை வலிமைப்படுத்தும் பணியில், பா.ஜ., மேலிடம் இறங்கி உள்ளது. இதற்காக, பூத் கமிட்டி கூட்டங்களை நடத்த ஆரம்பித்துள்ளது.
கடந்த 6ம் தேதி, செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்துாரில், பா.ஜ., பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. இதில், பங்கேற்றவர்களுக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்கள் குறித்து, மூத்த நிர்வாகிகள் விளக்கம் அளித்தனர்.
மேலும், கூட்டத்தில் பங்கேற்றவர்கள், ஒவ்வொருவருக்கும் மூன்று பூத்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஓட்டுச்சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி உறுப்பினர்கள் பட்டியலை சரிபார்க்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்காக ஒவ்வொருவருக்கும் தலா 3,000 ரூபாய் செலவுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகளைப் போல பெரிய கவனிப்புகளும், அடுத்தடுத்து உண்டு எனவும் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.