முருக கடவுளை அரசியலுக்காக பா.ஜ., பயன்படுத்துகிறது: சீமான்
முருக கடவுளை அரசியலுக்காக பா.ஜ., பயன்படுத்துகிறது: சீமான்
ADDED : ஜூன் 09, 2025 03:29 AM

புதுக்கோட்டை : தமிழகத்தில் முருக கடவுளை அரசியலுக்காக பா.ஜ., பயன்படுத்துவதாக சீமான் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில், நா.த.க., ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கூறியதாவது:
முருக கடவுளை ஒப்புக்கு பா.ஜ.,வினர் துாக்கி பிடிக்கின்றனர். ஆனால், நான் உளமாற துாக்கி பிடிக்கிறேன். நான் முருகனின் பேரன்; நான் துாக்கி பிடிப்பதற்கும், அவர்கள் துாக்கி பிடிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. பா.ஜ., நேற்று ஆரம்பித்த கட்சி கிடையாது; முருகனும் நேற்று வரவில்லை. பா.ஜ., இவ்வளவு நாள் என்ன செய்து கொண்டிருந்தது?
முருகனை தொட்டால் ஓட்டு வருமா என்று பார்க்கின்றனர். மதுரையில் நடத்த திட்டமிட்டிருக்கும் முருகனுக்கான மாநாட்டை அரசியலுக்கு பயன்படுத்துகின்றனர். இல்லை என்றால், எப்பவோ நடத்தி இருக்க வேண்டும்.
உ.பி.,யில் ராமரை தொடுவர்; கேரளாவில் அய்யப்பனை தொடுவர்; ஒடிஷாவில் புரி ஜெகநாதரை தொடுவர். தமிழகத்தில் எங்கள் இறையப்பன் முருகனை தொட்டு இருக்கின்றனர்.
இதற்கெல்லாம் ஏமாறுகிற கூட்டம் தமிழ் மக்கள் என பா.ஜ., நினைக்கிறது. அக்கட்சியினர் மக்கள் நலனுக்கான அரசியல் செய்யாமல், மத அரசியல் செய்கின்றனர். இந்த அரசியலை, தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.