ஆர்.எஸ்.எஸ்., வீட்டு தொடர்பு இயக்கம்; பங்கேற்க பா.ஜ.,வினருக்கு மேலிடம் உத்தரவு
ஆர்.எஸ்.எஸ்., வீட்டு தொடர்பு இயக்கம்; பங்கேற்க பா.ஜ.,வினருக்கு மேலிடம் உத்தரவு
ADDED : அக் 29, 2025 04:49 AM

சென்னை: 'ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டை முன்னிட்டு , வரும் நவம்பர் 2 முதல் 23 வரை நடக்கவுள்ள வீட்டு தொடர்பு இயக்கத்தில், பா.ஜ., நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும்' என, அக்கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1925ல் துவங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழா, கடந்த 2ம் தேதி விஜயதசமியன்று துவங்கியது. அதையொட்டி, ஓராண்டு முழுதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு, அந்த அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
முதல் கட்டமாக அனைத்து ஒன்றியங்கள், நகர பகுதிகளில் சீருடை அணிந்த ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள், சங் பரிவார் அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்ற நிகழ்ச்சிகள் நடந்து முடிந்துள்ளன.
இதில், 30,000க்கும் அதிகமானோர், ஆர் .எஸ்.எஸ்., சீருடையில் பங்கேற்றனர்.
அதைத் தொடர்ந்து, வரும் நவம்பர் 2 முதல் 23ம் தேதி வரை வீட்டுத் தொடர்பு இயக்கம் நடக்கவுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள், இரண்டு அல்லது மூன்று பேர் கொண்ட குழுவாக பிரிந்து வீடு வீடாகச் சென்று, நுாற்றாண்டு காணும் ஆர்.எஸ்.எஸ்., பற்றி எடுத்துக்கூற உள்ளனர்.
இந்த வீட்டு தொடர்பு இயக்கத்தில், பா.ஜ., உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளின் அனைத்து நிர்வாகிகள், தொண்டர்களும் பங்கேற்க உள்ளனர். இதில், பா.ஜ., நிர்வாகிகள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று, அக்கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
'தொண்டர்களுடன் இணைந்து, வீடுகளுக்கு நேரில் செல்லும்போது, அவர்களின் வாழ்க்கை நிலையையும், கடந்த 11 ஆண்டு கால மத்திய பா.ஜ., ஆட்சி, பிரதமர் மோடி குறித்து மக்கள் என்ன நினைக்கின்றனர் என்பதையும் நேரில் அறிய முடியும்.
'எனவே, வீட்டு தொடர்பு இயக்கத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என, பா.ஜ., தலைமை அறிவுறுத்தியுள்ளது.
அதைத் தொடர்ந்து, வீட்டுத் தொடர்பு இயக்கத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்து ஆலோசிக்கவும், வழிகாட்டவும், மாவட்ட அளவில் கூட்டங்களை பா.ஜ., நடத்தி வருகிறது.

