சர்ச்சைக்குரியவர்களை வடிகட்ட தயாராகிறது பா.ஜ., தலைமை
சர்ச்சைக்குரியவர்களை வடிகட்ட தயாராகிறது பா.ஜ., தலைமை
ADDED : மார் 09, 2024 11:56 PM

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட முக்கியமான தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள் அடங்கிய பா.ஜ.,வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் கடந்த வாரம் வெளியானது.
நடவடிக்கை
இந்நிலையில், அடுத்தடுத்த கட்ட வேட்பாளர் பட்டியலை தயார் செய்து வெளியிடும் நடவடிக்கைகளில், பா.ஜ., தலைமை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இதற்கான ஆலோசனைக்கு தயாராகும் விதமாக, மாநில வாரியாக மத்திய தேர்தல் குழுவுக்கு, வந்து சேரும் வேட்பாளர் பெயர்களின் பரிந்துரை நடவடிக்கைகளில் மிக ஜாக்கிரதையான அணுகுமுறைகளை மேற்கொள்ளும்படி, கட்சி மேலிடம் எச்சரிக்கை செய்து
உள்ளது.
மாற்று கட்சிகளில் இருந்து வந்து சீட் கேட்பவர்கள், அரசியல் அல்லாத மற்ற துறைகளிலிருந்து வருவோர் ஆகியோரை தீவிரமாக கண்காணித்து, குற்றப் பின்னணி மற்றும் சர்ச்சையான பின்னணி உள்ளவர்களை வடிகட்டி விடும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்ட சிறு சிறு குளறுபடிகளே இந்த எச்சரிக்கைக்கு காரணம். அந்த பட்டியலில், மேற்கு வங்கத்தின் அசன்சோல் தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்டார்.
பவன் சிங் என்ற அந்த நபர், போஜ்புரி மொழியில் பிரபலமாக விளங்கி வரும் பாடகர். பட்டியல் வெளியான அடுத்த நாளே, தான் போட்டியிலிருந்து விலகுவதாக பவன் சிங் அறிவித்தார்.
இவர் தன் பாடல்களில், பெண்களை மிக மிக கொச்சைப்படுத்தி ஆபாசமாக வர்ணித்து பாடுகிறவர் என்றும், இவருக்கு சீட் தரலாமா என்ற ரீதியில் கடும் விமர்சனங்கள் எழுந்ததே இதற்கு காரணம்.
இதேபோல, உத்தர பிரதேசத்தின் பாரபங்கி தொகுதியின் சிட்டிங் எம்.பி., உபேந்தர்சிங் ராவத். இவர் பெயரும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்று இருந்தது.ஆனால், பட்டியல் வெளியான சிலமணி நேரங்களிலேயே, ஒரு பெண்ணுடன் சர்ச்சைக்குரிய வகையில் இருக்கும் படங்கள், சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தின.
எதிர்ப்பு
இதையடுத்து, அவரும் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகினார். அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் இருவர் உடனடியாக போட்டியிலிருந்து விலகுவது, பா.ஜ., வரலாற்றிலேயே இது தான் முதன்முறை.
இந்த இருவரது தேர்வுக்கும், கட்சியினர் மட்டுமல்லாது பொதுமக்கள் மத்தியிலும் பெரும் எதிர்ப்பு கிளம்பியதை, பா.ஜ., தலைவர்கள் கவனத்தில் கொண்டுள்ளனர். கட்சி தலைமைக்கு இந்த இரு சம்பவங்களும் தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிட்டன.
இதனால் இரண்டாம் கட்ட வேட்பாளர் தேர்விலும், இது போன்ற தேவையற்ற குழப்பங்கள் உருவாகி விடக்கூடாது என்றும், அதற்கேற்ப பரிந்துரை செய்யும் பெயர்கள் இருக்கும்படியும் பார்த்துக் கொள்வதில், மூத்த தலைவர்கள் உறுதியாக இருப்பதாக பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்தன.- நமது டில்லி நிருபர் -
