திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பா.ஜ.,வினரிடம் எழுச்சி
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பா.ஜ.,வினரிடம் எழுச்சி
ADDED : பிப் 06, 2025 01:57 AM

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலை தொடர்பான பிரச்னையில் தடையை உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பா.ஜ.,வினரிடையே புதிய உற்சாகமும், எழுச்சியும் தொற்றிக் கொண்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை தொடர்பான பிரச்னையில், ஆடு, கோழி பலியிடச் சென்றபோது போலீசார் தடுக்க, தொடர்ந்து படிமீது அமர்ந்து அசைவ பிரியாணி உண்பது என பிரச்னை வளர்ந்தது.
இதையடுத்து திருப்பரங்குன்றத்தில் ஹிந்து முன்னணியினர் பிப். 4 மதியம் 3:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்ததும், அதற்கு அரசு 144 தடை உத்தரவு பிறப்பிக்கவும் நேர்ந்தது.
தங்கள் முயற்சிக்கு அரசு முட்டுக்கட்டை போடுவதாகக் கருதிய ஹிந்து முன்னணியினர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
தாக்கம்
முடிவு எப்படி வந்தாலும் 144 தடை உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்ற முடிவோடு இருந்தனர். அவர்களுக்கு பா.ஜ., மற்றும் ஹிந்து மக்கள் கட்சி உட்பட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. ஹிந்து அமைப்பினர், மதுரை மட்டுமின்றி திண்டுக்கல், தஞ்சை, திருநெல்வேலி, திருச்சி, கோவை, திருப்பூர் உட்பட பிற மாவட்டங்களிலும் இப்பிரச்னையை கையிலெடுத்து பிரசாரம் செய்தனர்.
அதேசமயம் தைப்பூசத் திருவிழா நேரத்தில் இப்பிரச்னை வெடித்ததால், திருப்பரங்குன்றம் வர ஏற்கனவே முடிவெடுத்த முருக பக்தர்களிடமும் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
குவிந்தது கூட்டம்
இந்நிலையில் உயர் நீதிமன்றத்தில், இவ்வழக்கில் நேற்று முன்தினம் மதியம் தீர்ப்பளித்த நீதிபதிகள், சில நிபந்தனைகளுடன், மதுரை பழங்காநத்தத்தில் மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தலாம் என அறிவித்தனர். இதை வெற்றியாகக் கருதிய பா.ஜ., உள்ளிட்ட அமைப்புகள், ஒரு மணி நேரத்தில் அங்கு பெரிய அளவில் திரண்டனர். போலீசார் இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
இப்படி ஏதும் நடந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான், பிப்., 3 இரவில் தமிழகம் முழுதும் பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தோரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர்.
மேற்கு மாவட்ட பார்வையாளர் ராஜரத்தினம், துணைத் தலைவர்கள் சதீஷ்குமார், ராஜ்குமார், மண்டல தலைவர் கிருஷ்ணகுமார் உட்பட பல நிர்வாகிகளை கைது செய்து விராட்டிப்பத்து மண்டபத்தில் அடைத்தனர்.
மேற்கு மாவட்ட பார்வையாளர் ராஜரத்தினம் கூறுகையில், ''மாடியில் இருந்த எங்கள் வீட்டின் பின்புறக் கதவை நள்ளிரவில் தட்டி என்னை எழுப்பினர். உதவி கமிஷனரை பார்த்து விடுங்கள். மீண்டும் வீட்டில் விட்டுவிடுகிறோம்' என்று உடை மாற்றவும் அனுமதிக்காமல் கைலியுடன் அழைத்துச் சென்றனர்.
''ஆனால் மண்டபத்தில் அடைத்து வைத்து மனித உரிமையை மீறினர். இதனால் போலீசார் மீது வழக்கு தொடரலாம் என்றிருக்கிறேன்,'' என்றார்.
அதேசமயம் மாநில பொதுச்செயலர் சீனிவாசன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைப் பொதுச்செயலர் விஷ்ணுபிரசாத் உட்பட பலரை வீட்டுக்காவலில் வைத்தனர். நீதிமன்ற தீர்ப்பை அடுத்து அவர்களை விடுவித்தனர். இரவில் இப்படி நிர்வாகிகளை கைது செய்தது, பா.ஜ.,வினரிடையே வேகத்தை ஏற்படுத்தி விட்டது.
லோக்சபா தேர்தலில் மதுரை தொகுதியில் பா.ஜ., தனித்துப் போட்டியிட்டு, 2ம் இடம் பெற்றிருந்த நிலையில், தற்போது போலீசாரின் கெடுபிடியால் பா.ஜ.,வினரிடம் எழுச்சி ஏற்பட்டுள்ளதாகக் கூறும் கட்சியினர், ஆர்ப்பாட்டத்திற்கு திரண்ட கூட்டத்தை உளவுப்பிரிவும் கணிக்கத் தவறிவிட்டதாக, பா.ஜ.,வினர் கூறினர்.