ADDED : அக் 26, 2025 03:59 AM

சென்னை: அடுத்த சில மாதங்களில் தமிழக சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அ.தி.மு.க., ஏற்கனவே பிரசாரத்தை துவங்கிவிட்டது. பழனிசாமி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தமிழக பா.ஜ.,வும் பிரசாரத்தை துவங்கிவிட்டது.
பீஹார் சட்டசபை தேர்தலில் பா.ஜ., படுபிசியாக இருந்தாலும், தமிழக அரசியலிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. தமிழக தேர்தல் அறிக்கையை தயாரிக்க, பா.ஜ., முடிவெடுத்து விட்டதாம். விரைவில் பா.ஜ., குழு ஒன்று தமிழகம் வரவிருக்கிறதாம். தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட பல சீனியர் தலைவர்களை இந்த குழு சந்திக்கும்.
தி.மு.க., அரசின் ஊழல்கள், போதை பொருள் நடமாட்டம், சட்டம் - ஒழுங்கு நிலைமை என, பல விஷயங்களை இந்த குழு ஆராய்ந்து அறிக்கை தயாரிக்க உள்ளதாம். நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோருடன், அனுராக் தாகூரையும் இந்த குழுவின் அங்கத்தினராக, தேசிய தலைவர் நட்டா நியமித்துள்ளாராம். தமிழகத்தில் பணிபுரிந்த, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர் இந்த குழுவிற்கு உதவி செய்வாராம்.
'பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையில், கச்சத்தீவு குறித்து ஒரு முக்கிய விஷயம் நிச்சயம் சொல்லப்படும்' என்கின்றனர். இந்த தேர்தல் அறிக்கை பொங்கலன்று வெளியிடப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

