ADDED : ஜூன் 20, 2024 12:34 AM

அடுத்த சில மாதங்களில் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், ஹரியானாவை தக்க வைக்க பா.ஜ., தீவிரமாகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, முன்னாள் முதல்வர் பன்சி லாலின் மருமகள் மற்றும் பேத்தி, காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்துள்ளனர்.
ஹரியானாவில் 2014 முதல் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலுக்கு முன், முதல்வராக இருந்த மனோகர் லால் கட்டார் மாற்றப்பட்டு, நயாப் சிங் சைனி முதல்வராக்கப்பட்டார். மனோகர் லால் கட்டார் தற்போது எம்.பி.,யாகவும், மத்திய அமைச்சராகவும் உள்ளார்.
அதிர்ச்சி
லோக்சபா தேர்தலில், மாநிலத்தில் உள்ள 10 தொகுதிகளில், ஐந்தில் காங்கிரஸ் வென்று, பா.ஜ.,வுக்கு அதிர்ச்சி கொடுத்தது. மொத்தம், 90 தொகுதிகள் உள்ள சட்டசபைக்கு, அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது.
இந்நிலையில், நான்கு முறை எம்.எல்.ஏ.,வான கிரண் சவுத்ரி, செயல் தலைவராக இருந்த அவருடைய மகள் ஸ்ருதி சவுத்ரி ஆகியோர் காங்கிரசில் இருந்து நேற்று முன்தினம் விலகினர்; இதைத் தொடர்ந்து, பா.ஜ.,வில் நேற்று இணைந்தனர்.
இது முக்கிய அரசியல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது. முன்னாள் முதல்வரான பன்சி லாலின் மருமகள் தான் கிரண் சவுத்ரி, பேத்தி ஸ்ருதி சவுத்ரி. ஹரியானா விகாஸ் கட்சியை துவக்கிய பன்சி லால், மூன்று முறை முதல்வராக இருந்துள்ளார். கடந்த 1996ல் பா.ஜ-.,வுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்தார்.
இவர்கள் இருவரும் பா.ஜ.,வில் இணைந்துள்ளது, அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தது. மாநிலத்தில், ஜாட் சமூகத்தினர் 25 சதவீதம் வரை உள்ளனர். இவர்களுடைய ஓட்டுகள், பல தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதாக உள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக, பா.ஜ.,வுக்கு எதிரான ஜாட் சமூகத்தினர் நிலைப்பாடு உள்ளது. அக்னிவீர் போராட்டம், பாலியல் புகாரில் சிக்கிய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷணுக்கு எதிரான போராட்டங்களில், தாங்கள் புறக்கணிக்கப்பட்டதாக ஜாட் சமூகத்தினர் கருதுகின்றனர்.
வாய்ப்பு
மேலும், 2014ல் ஆட்சியை பிடித்தபோது, ஜாட் அல்லாத மனோகர் லால் கட்டார் முதல்வராக்கப்பட்டார். அவருக்கு மாற்றாக வந்த நயாப் சிங் சைனியும், ஜாட் சமூகத்தைச் சாராதவர்.
இந்நிலையில், ஜாட் சமூகத்தினர் ஆதரவை பெறும் வகையில், கிரண் சவுத்ரி மற்றும் அவருடைய மகள் ஸ்ருதி சவுத்ரியை, பா.ஜ., வளைத்துள்ளது. லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது; மாநில காங்., தலைவராக உதய் பான் நியமிக்கப்பட்டதில், இவர்கள் அதிருப்தியில் இருந்தனர்.
இவர்கள் வருகையின் வாயிலாக, ஹரியானா அரசியலில் கோலோச்சிய மூன்று மிகப்பெரும், 'லால்' குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தற்போது பா.ஜ.,வில் உள்ளனர். தேவி லால், பஜன் லால், பன்சி லால் ஆகியோர், மாநில அரசியலில் நீண்ட காலம் கோலோச்சியவர்கள்.
4 முறை எம்.எல்.ஏ.,
முன்னாள் முதல்வரான பஜன் லாலின் மகனான குல்தீப் பிஷ்னோய், தன் மனைவி ரேணுகாவுடன், கடந்தாண்டு ஆகஸ்டில் பா.ஜ.,வில் இணைந்தார். நான்கு முறை எம்.எல்.ஏ.,வான குல்தீப் பிஷ்னோய், ஜாட் அல்லாதோர் ஓட்டுகள் பா.ஜ.,வுக்கு கிடைப்பதற்கு முக்கியமானவராக பார்க்கப்படுகிறார்.
முன்னாள் துணை பிரதமரான தேவி லாலின் மகனான ரஞ்சித் சிங் சவுதாலா, இந்தாண்டு மார்ச் மாதம் பா.ஜ.,வில் இணைந்தார்; தற்போது மாநில அமைச்சராக உள்ளார்.
- நமது சிறப்பு நிருபர் -