கிளை அமைப்புகளில் மாற்று கட்சியினர்: பா.ஜ., ஆய்வு குழுவினர் கடும் அதிர்ச்சி
கிளை அமைப்புகளில் மாற்று கட்சியினர்: பா.ஜ., ஆய்வு குழுவினர் கடும் அதிர்ச்சி
UPDATED : ஜூலை 21, 2025 03:09 AM
ADDED : ஜூலை 21, 2025 12:48 AM

மதுரை: தமிழகத்தில் 'பூத்' அளவிலான கிளை அமைப்புகளை சீரமைக்க, களமிறங்கிய பா.ஜ., ஆய்வுக் குழுவினர், பிற கட்சியினர் அதிலிருப்பது தெரிந்ததால் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
தமிழகத்தில் தாமரையை மலரச் செய்தே ஆக வேண்டும் என பா.ஜ., தலைமை சபதம் எடுத்து செயல்படுகிறது.
மேலும், 2026 தேர்தலில் அமைச்சரவையில் இடம், இரட்டை இலக்கத்தில் எம்.எல்.ஏ.,க்கள் என்ற எண்ணத்தில் உள்ளனர்.
இதற்காக, கட்சியை பலப்படுத்தும் நோக்கில், கட்சியின் மாவட்ட, மாநில நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள் அடங்கிய குழுக்களை அனுப்பி, பூத் அளவிலான கிளை அமைப்புகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
பா.ஜ., கிளை அமைப்புகளை பொறுத்தவரை, தலைவர், செயற்குழு உறுப்பினர்கள் உட்பட 12 பேர் உள்ளனர். இந்த அமைப்புகள், கட்சியின் மாவட்ட, மண்டல நிர்வாகத்தால் எப்படி ஒருங்கிணைக்கப்பட்டு, செயல்படுகிறது என்பதை குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
முதற்கட்டமாக, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி லோக்சபா தொகுதிகளுக்கு உட்பட்ட, 18 சட்டசபை தொகுதிகளில் உள்ள கிளைகளில் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன.
இது பற்றி கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
கிளை அமைப்புகளில் பெரும்பாலானவை, உண்மையானவை இல்லை; அவர்களுக்கும் மண்டல, மாவட்ட, மாநில நிர்வாகிகளுக்கும் தொடர்பே இல்லாதது தெரியவந்தது.
கிளை அமைப்புகளின் உறுப்பினர்களை, செல்போனில் அழைத்தால், 'நான் வேறு கட்சியைச் சேர்ந்தவன், என்னை எப்படி பா.ஜ.,வில் சேர்த்தீர்கள்' என பதிலளித்து அதிர்ச்சி அடையச் செய்துள்ளனர்.
உண்மையான உறுப்பினர்களும் அதிருப்தியுடனேயே உள்ளனர். காரணம், பா.ஜ.,வின் மண்டல, மாவட்ட, ஒன்றிய அளவிலான தலைவர்களில் பலரும் இளைஞர்கள், கல்வியாளர்கள், தொழிலதிபர்களாக உள்ளனர்.
அவர்கள், கிளையில் ஏதேனும் நிகழ்வில் பங்கேற்றுவிட்டு, அதன்பிறகு, கிளை அமைப்பினருடன் எவ்வித தொடர்பும் இன்றி உள்ளனர். தி.மு.க., - -அ.தி.மு.க., போன்ற கட்சிகளில், நல்லது, கெட்டதுக்கு உடனே தொடர்பு கொண்டு விசாரிப்பது, நிதியுதவி அளிப்பது போல, பா.ஜ.,வில் எந்த இணக்கமும் இல்லை.
கடந்த தேர்தல்களின்போது கூட, கட்சி அளித்த நிதி, இந்த கிளை அமைப்புகளுக்கு போய்ச் சேரவில்லை. இதுபோன்ற தகவல்களால் ஆய்வுக் குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
எனவே, சுறுசுறுப்பாக செயல்படுவதோடு, கிளை அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளும் நிர்வாக அனுபவம் உள்ளவர்களை, மாவட்ட அளவிலான பொறுப்புகளில் நியமிக்குமாறு ஆய்வுக்குழு, கட்சி மேலிடத்துக்கு தெரிவித்துள்ளது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.