கூட்டணிக்கு தே.மு.தி.க.,வை இழுக்கும் பொறுப்பை ஏற்ற பா.ஜ.,
கூட்டணிக்கு தே.மு.தி.க.,வை இழுக்கும் பொறுப்பை ஏற்ற பா.ஜ.,
ADDED : ஏப் 20, 2025 01:08 AM

சென்னை: தே.மு.தி.க.,வை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இழுக்கும் பொறுப்பை பா.ஜ., ஏற்றுள்ளது.
இதற்காக, அக்கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதாவை, பா.ஜ., மேலிட தலைவர்கள் சந்திக்க உள்ளனர்.
இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
கடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இடம்பெற்று போட்டியிட்ட ஒரே இடத்திலும் தோல்வியடைந்து.
தே.மு.தி.க.,வுக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்க, அ.தி.மு.க., மேலிடம் விரும்பவில்லை. இதனால், இரு கட்சி தலைவர்களிடம் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்த பின், தே.மு.தி.க.,வை அ.தி.மு.க., கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.
தி.மு.க.,வுக்கு எதிராக பலமான கூட்டணி அமைக்க, மத்திய அமைச்சர் அமித் ஷா தீவிரம் காட்டி வருகிறார். குறிப்பாக, மற்ற கட்சிகளை சேர்க்கும் பணிகளை, வரும் ஜூன் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளார்.
எனவே, தே.மு.தி.க.,வை தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்கும் பொறுப்பை பா.ஜ., ஏற்றுள்ளது.
இதற்காக, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதாவை, பா.ஜ., மேலிட தலைவர்கள், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் விரைவில் சந்தித்து பேச உள்ளனர்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

