பா.ம.க., - தே.மு.தி.க., எதிர்பார்ப்பு குறித்து பா.ஜ., அவசர விசாரிப்பு
பா.ம.க., - தே.மு.தி.க., எதிர்பார்ப்பு குறித்து பா.ஜ., அவசர விசாரிப்பு
ADDED : மே 15, 2025 01:57 AM

சென்னை: அ.தி.மு.க., உடனான கூட்டணியை பா.ஜ., உறுதி செய்த நிலையில், பா.ம.க., - தே.மு.தி.க., கட்சிகள், பிடிகொடுக்காமல் உள்ளன. இதற்கான காரணம், அக்கட்சிகளின் எதிர்பார்ப்பு போன்ற விபரங்களை, பா.ஜ., மேலிடம் விசாரித்து வருகிறது.
இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
பா.ஜ.,வுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில், தீவிரம் காட்டிய தி.மு.க.,வை, வரும் சட்டசபை தேர்தலில் தோற்கடித்தாக வேண்டும் என்பதில், பா.ஜ., மேலிடம் உறுதியாக உள்ளது.
'கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் இடையே காணப்படும் ஒற்றுமை, அக்கட்சிகளின் தொண்டர்களிடமும் இருக்க வேண்டும். அதனால், தேர்தலுக்கு ஓராண்டிற்கு முன்னதாகவே கூட்டணியை இறுதி செய்ய வேண்டும்' என்பதில் அமித் ஷா திட்டவட்டமாக உள்ளார்.
எனவே, தமிழகத்தில் கூட்டணி கட்சிகள், அக்கட்சி தொண்டர்கள் இடையே, ஒருமித்த உணர்வை ஏற்படுத்துவதற்காக, சட்டசபை தேர்தலுக்கு ஓராண்டிற்கு முன்னதாகவே, தி.மு.க.,வுக்கு எதிராக உள்ள கட்சிகளுடன், கூட்டணி அமைக்கும் முயற்சியில், அமித் ஷா நேரடியாக ஈடுபட்டார்.
கடந்த மாதம், 11ம் தேதி சென்னை வந்த அமித் ஷா, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை அறிவித்தார். அம்மாத இறுதிக்குள் பா.ம.க., - தே.மு.தி.க., கட்சிகளையும் கூட்டணியில் இணைக்க பா.ஜ., மேலிடம் முடிவு செய்தது.
இதற்காக அக்கட்சிகளின் தலைமையிடம், மேலிடத் தலைவர்கள் பேச்சு நடத்தினர். இந்த முடிவை, பா.ம.க.,வில் ராமதாஸ் ஏற்காததால், அவருக்கும், அன்புமணிக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது.
இதை சரிகட்டுவதுடன், ராஜ்யசபா எம்.பி., பதவி தொடர்பாக அ.தி.மு.க., - தே.மு.தி.க., இடையே ஏற்பட்டுள்ள பிரச்னைகளையும் சரி செய்து, ஏப்ரல் இறுதிக்குள் அக்கட்சிகளை இணைத்து, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்த அமித் ஷா திட்டமிட்டிருந்தார். போர் சூழலால் அதற்கான பணியில் சுணக்கம் ஏற்பட்டது.
தற்போது, அக்கட்சிகளை கூட்டணியில் சேர்க்கும் முயற்சிகள் துவக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, பா.ம.க.,வை தி.மு.க., கூட்டணியில் சேர்க்க, ராமதாஸ் தீவிரம் காட்டுகிறார்.
எனவே, தேசிய ஜனநாய கூட்டணியில், தே.மு.தி.க., - பா.ம.க., இணைவதை தடுக்கும் காரணங்கள்; அக்கட்சிகள் பா.ஜ., வாயிலாக கூட்டணிக்கு வர விரும்புகின்றனவா அல்லது அ.தி.மு.க., வாயிலாக கூட்டணியில் சேர உள்ளனவா, எத்தனை தொகுதிகளில் போட்டியிட விரும்புகின்றன போன்ற உள்ளிட்ட விபரங்களை, பா.ஜ., மேலிடம் சேகரிக்கிறது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.