ADDED : ஜன 16, 2024 02:16 AM

மத்திய அமைச்சர் முருகன் வீட்டில் நடந்த பொங்கல் விழாவில் பிரதமர் மோடியுடன் நடிகை மீனாவும் பங்கேற்றதால் அவர் பா.ஜ.வில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்வி அக்கட்சியினரிடையே எழுந்துள்ளது.
தற்போதைய நிலையில் தென் சென்னை லோக்சபா தொகுதி தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதியாக தமிழக பா.ஜ. தரப்பில் கருதப்படுகிறது.
இண்டியா கூட்டணி கட்சியின் வேட்பாளராக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் போட்டியிடுவார் என்ற எதிர்ப்பு அக்கட்சியில் எழுந்துள்ளது.
கமல் போட்டியிடும் பட்சத்தில் தமிழக பா.ஜ. சார்பில் நட்சத்திர வேட்பாளரை களம் இறக்கவும் ஆலோசித்துள்ளது.
தென் சென்னை தொகுதியில் பா.ஜ. மாநில நிர்வாகிகள் டாக்டர் மைத்ரேயன், நாராயணன் திருப்பதி, நடிகை குஷ்பு சுமதி வெங்கடேசன் சூர்யா உள்ளிட்டோர் மத்தியில் போட்டி உருவாகியுள்ளது.
தென் சென்னை தொகுதி மேலிட பொறுப்பாளராக கரு.நாகராஜனும் இணை பொறுப்பாளராக கராத்தே தியாகராஜனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சட்டசபை தேர்தலில் குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது அவர் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக உள்ளார்.
தென் சென்னையில் கமல் போட்டியிட்டால் அவரை எதிர்த்து குஷ்பு போட்டியிடுவரா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.
இந்நிலையில் மத்திய அமைச்சர் முருகன் டில்லியில் உள்ள தன் வீட்டில் நேற்று முன்தினம் பொங்கல் விழாவில் பங்கேற்றார்.
இந்த விழாவில் நடிகை மீனாவும் பங்கேற்றார். தென் சென்னை தொகுதியில் அடங்கிய சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் நடிகை மீனா வசிக்கிறார்.
அவரை பா.ஜ. வில் இணைத்து தென் சென்னை தொகுதி வேட்பாளராக்க பா.ஜ. டில்லி மேலிடம் காய் நகர்த்துகிறதா என்ற கேள்வியும் அக்கட்சியில் எழுந்துள்ளது.
இது தொடர்பாக மீனாவின் கருத்து கேட்க அவரது மொபைல்போனில் தொடர்பு கொண்ட போது மீனாவின் தாயார் ராஜமல்லிகா 'மீனா வெளியூர் சென்றுள்ளார்' என்றார்.
'டில்லியில் பிரதமர் மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில் மீனாவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதால் அவர் பா.ஜ. வில் சேருகிறாரா?' என்ற கேள்வியை கேட்டதற்கு ராஜமல்லிகா ''கட்சியில் சேரும் முடிவை மீனா தான் எடுக்க வேண்டும்.
''பொங்கல் விழா என்பதால் மீனா பங்கேற்றார். அவர் கட்சியில் சேருவாரா என்பது எனக்கு தெரியாது. கட்சியில் சேரும் எண்ணத்தில் பொங்கல் விழாவில் மீனா பங்கேற்கவில்லை'' என்றார்.
-நமது நிருபர்-