ராஜ்யசபா 'சீட்': பிரேமலதா நிபந்தனையை புறக்கணித்த பா.ஜ., - அ.தி.மு.க.,
ராஜ்யசபா 'சீட்': பிரேமலதா நிபந்தனையை புறக்கணித்த பா.ஜ., - அ.தி.மு.க.,
UPDATED : பிப் 16, 2024 05:18 AM
ADDED : பிப் 15, 2024 10:53 PM

சென்னை: தே.மு.தி.க.,வுக்கு ராஜ்யசபா எம்.பி., 'சீட்' வழங்க முடியாது என, அ.தி.மு.க., - பா.ஜ., கட்சிகள் கைவிரித்து விட்டன.
லோக்சபா தேர்தலில் தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைக்க, அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., தரப்பில் தனித்தனியாக பேச்சு நடந்து வருகிறது. தே.மு.தி.க., மாவட்டச் செயலர்கள் கூட்டத்தை, அதன் பொதுச்செயலர் பிரேமலதா சமீபத்தில் நடத்தினார். பின், '14 லோக்சபா தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா 'சீட்' தரும் கட்சியுடன் கூட்டணி வைக்கப்படும்' என, அதிரடியாக அறிவித்தார்.
இந்த நிபந்தனையால், அ.தி.மு.க., - பா.ஜ., தலைமைகள் அதிருப்தி அடைந்தன; கூட்டணி பேச்சை தொடராமல் நிறுத்தி கொண்டன. இதையடுத்து. மீண்டும் கட்சி அலுவலகத்தில் பேட்டியளித்த பிரேமலதா, 'தே.மு.தி.க.,விற்கு 14 லோக்சபா தொகுதிகள் வேண்டும் என யாரிடமும் கேட்கவில்லை.
மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் சிலர் விருப்பப்பட்டதை வெளியே கூறினேன். அதை சரியான புரிதல் இல்லாமல், பத்திரிகையாளர்கள், தே.மு.தி.க., 14 சீட் கேட்டு நிர்பந்திப்பது போல செய்தி வெளியிட்டு விட்டனர். இருந்த போதும், கூட்டணி பேச்சுவார்த்தையின் போது ராஜ்யசபா 'சீட்' என வலியுறுத்தி கேட்பது, எங்களது உரிமை' என்றார்.
இதையடுத்து, அதிகாரப்பூர்வமாக இல்லாமல் தே.மு.தி.க., முன்னணி தலைவர்கள் சிலருடன், அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., தரப்பில் கூட்டணி தொடர்பாக பேசி வந்த ஒரு சிலரும், அக்கட்சியினருடன் கூட்டணி சம்பந்தாக பேசுவதை நிறுத்தி விட்டனர்.
இதற்கிடையில், கூட்டணி பேச்சு நடத்துவதற்காக, தே.மு.தி.க., தரப்பில் அமைக்கப்படவிருந்த பேச்சுவார்த்தைக் குழுவும் இதுவரை அமைக்கப்படவில்லை. இதனால், அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., தலைமைகளும், அதிகாரப்பூர்வமாக தே.மு.தி.க.,வுடன் கூட்டணி பேச்சை தொடர முன்வரவில்லை. தே.மு.தி.க.,விற்கு ராஜ்யசபா 'சீட்' வழங்கப்படாது என, இரு கட்சிகளும் திட்டவட்டமாக கூறி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க.,விற்கு ஒரு லோக்சபா மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்பட இருப்பதாக தகவல் பரவி உள்ளது. தே.மு.தி.க., தலைமைக்கு நெருக்கமாக இருப்போர் சிலர், இப்படியொரு தகவலை கசிய விட்டிருப்பதாக தி.மு.க., தரப்பில் கூறுகின்றனர்.