டோக்கியோவில் தெரியும் நீலவானம் டில்லியில் தெரியாதது ஏன்?
டோக்கியோவில் தெரியும் நீலவானம் டில்லியில் தெரியாதது ஏன்?
ADDED : செப் 08, 2026 05:38 AM

நீல வானம் எங்கே காணோம்?
ஜப்பானில் வசிக்கும் இந்தியரான ஓம், டோக்கியோவில் தெளிவாகத் தெரியும் நீல வானத்தையும், டில்லியின் தெளிவற்ற வானத்தையும் படம் பிடித்து, இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு உள்ளார்.
'டோக்கியோவில் வானம் தெளிவாக இருக்கிறது. ஏன், இதேபோல, டில்லியில் தெளிவாக இல்லை? மக்கள் தொகை, அது, இது என்று காரணம் சொல்லலாம். ஆனால் உண்மையில், டில்லியை காட்டிலும் டோக்கியோவில் மக்கள் தொகை அதிகம்' என்று கூறியுள்ளார். 'தேசிய தலைநகரை சுத்தமாக பராமரித்தால், மக்களின் அன்றாட வாழ்க்கைத்தரம் உயரும்; வெளிநாடுகளிலும் இந்தியா பற்றிய மதிப்பீடு உயரும்' என்பது அவரது கருத்து.
ரொட்டியில், 'ரப்பர்பேண்ட்'
ஹோட்டல்களில் வாங்கும் உணவுப் பண்டங்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு மிகவும் நியாயமானதே. ஆனால், எல்லா ஹோட்டல்களும் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதில்லை. புனே சந்தீப் ஹோட்டலில் ரொட்டி வாங்கி சாப்பிட ஆரம்பித்த வாடிக்கையாளர் ஒருவர், ரொட்டிக்குள், 'ரப்பர் பேண்ட்' இருப்பதைக் கண்டு அடைந்த அதிர்ச்சியை சொல்லி மாளாது.
![]() |
'உணவில் தலை முடி இருக்கும், ஈ இருக்கும், இப்போது ரப்பர்பேண்ட் கூட வர ஆரம்பித்து விட்டது. நீங்கள் வெளியில் உண்பது என்ன என்று அறிந்த பிறகு உண்ணுங்கள்' என்று வேதனையுடன் அந்த வாடிக்கையாளர் வெளியிட்ட பதிவு, இணையத்தில், 'டிரெண்டிங்' ஆகியுள்ளது.
மிளிர்ந்தது பாரம்பரியம்
அனுமன் அன்ஷ் என்ற ஹிந்தி படம் உலகம் முழுதும் வெளியாகி இருக்கிறது. ஆன்மிக தலைவரான நீம் கரோலி பாபாவின் வாழ்க்கை, போதனைகளை அடிப்படையாக வைத்து தயாரான இந்தப் படம், 4 வாரத்தில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
![]() |
டில்லி விடுதிகள் படுமோசம்
கல்விக்காக டில்லி செல்லும் மாணவர்களுக்கு, குறைந்த கட்டணத்தில் வசதியான தங்குமிடம் கிடைப்பது சிரமம். டில்லி யுனிவர்சிட்டி என்கிளேவ் கமலா நகரில், விடுதி அறை தேடிய அனு என்பவர், 'அறையின் அளவு, கட்டடங்கள், சுகாதாரம் போன்றவை, பெற்றோரின் பார்வையில் பயங்கரமானதாக இருந்தன; அச்சத்தை ஏற்படுத்தின' என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
![]() |
'18 ஆயிரம் ரூபாய் வரை மாத வாடகை கொடுத்தால் தான் அறை கிடைக்கும். இயலாத மாணவர்கள், புறாக்கூடு போன்ற, மின் வயர்கள் ஊசலாடும் பாதுகாப்பற்ற கட்டடங்களில் வசிக்கின்றனர். விடுதி உரிமையாளர்கள் கொள்ளையடிப்பதை ஏன் அரசு அனுமதிக்க வேண்டும்' என்று கேள்வி எழுப்பியுள்ளார் அனு. டில்லியில் விடுதி கட்டடம் இடிந்து, மாணவர்கள் பலர் பலியானதை குறிப்பிட்டு, 'சரியான கேள்வி தான்' என்கின்றனர், நெட்டிசன்கள்.
மெஹந்தியால் வாழ்வில் வசந்தம்
அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக இருக்கும் பிரியங்கா ஜெயின், பகுதி நேரமாக மெஹந்தி கலைஞராக வேலை பார்த்து, கூடுதல் வருவாய் ஈட்டுகிறார்.
ஒரு மணி நேரத்துக்கு மெஹந்தி அலங்காரம் செய்வதற்கு, 100 டாலர் - 9,400 ரூபாய் வாங்கும் பிரியங்கா, வாடிக்கையாளர்கள் தனக்கு, 20 சதவீதம் வரை டிப்ஸ் கொடுப்பதாகவும் மகிழ்ச்சியுடன் சொல்கிறார்.
![]() |
'மணப்பெண் அலங்காரம் என்றால், கட்டணம் பல மடங்கு கிடைக்கும்; திருமண நிகழ்வுகளில், 10 மணி நேரம் மெஹந்தி அலங்காரம் செய்தால், ஒரு லட்சம் ரூபாய் வரை கிடைக்கிறது' என்கிறார். 'இந்தியாவில் மெஹந்தி போடும் கலைக்கு பெரிய மரியாதை இல்லை; ஆனால், அமெரிக்காவில் இந்த கலை நன்கு மதிக்கப்படுகிறது' என்ற அவரது வீடியோ இணையத்தில், 'டிரெண்டிங்' ஆகியுள்ளது.
எதிரிக்கும் வரக்கூடாத நிலை!
குருகிராமை சேர்ந்த வாடிக்கையாளர் ரிஷப் கவுசிக், சொமாடோவில் உணவு ஆர்டர் செய்து நீண்ட நேரமாகியும் வரவில்லை. 'ஆர்டர் டிராக்கிங்' செய்த போது, உணவு கொண்டு வந்தவர், 40 நிமிடமாக ஒரே இடத்தில் இருப்பதை கண்டறிந்தார். சந்தேகத்தில் அந்த இடத்துக்கு நேரில் சென்ற ரிஷப், தான் ஆர்டர் செய்த உணவை இருவர் சாப்பிட்டுக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
![]() |
தாங்கள், 100 ரூபாய் கொடுத்து அந்த உணவை வாங்கியதாக இருவரும் கூறினர். இதுபற்றி, படங்களுடன் சொமாடோ உரிமையாளருக்கும் எக்ஸ் தளத்தில் ரிஷப் புகார் செய்தார். இதைக்கண்ட நெட்டிசன் ஒருவர், 'எதிரிக்கும் இப்படியொரு நிலை வரக்கூடாது' என பதிவு செய்தார்.





