'போர்டு' வச்சீங்களே ஆபீசர்ஸ்... ஒழுங்கா ரோடு போட்டீங்களா?
'போர்டு' வச்சீங்களே ஆபீசர்ஸ்... ஒழுங்கா ரோடு போட்டீங்களா?
UPDATED : மார் 22, 2026 05:34 AM
ADDED : மார் 22, 2026 05:18 AM

திருநெல்வேலி: திருநெல்வேலியில் மேற்கு சுற்றுவட்டச்சாலை பணிகள் நிறைவடையாத நிலையில், நெடுஞ்சாலை துறையினர், முன்கூட்டியே அமைத்துள்ள பெயர்ப் பலகை வாகன ஓட்டிகளை தடுமாற செய்கிறது.
திருநெல்வேலி நகருக்குள் நுழையாமல், மதுரை - கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையிலிருந்து தென்காசி, அம்பாசமுத்திரம், சங்கரன்கோவில் சாலைகளை இணைக்கும் வகையில், மேற்கு புற வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், 340 கோடி ரூபாய் மதிப்பில், 33 கி.மீ., நீளத்தில் சாலை அமைக்கப்படுவதில், முதல் கட்டமாக, 180 கோடி ரூபாய் செலவில், நாகர்கோவில் சாலையில் ஜோதிபுரம் முதல் கடையம் சாலையில், சுத்தமல்லி வரை, 11 கி.மீ., சாலை அமைக்கும் பணி நடக்கிறது.
இதில், பச்சையாறு குறுக்கே பாலம் அமைக்கும் பணி இன்னும் முடியவில்லை.
ஆரைக்குளம் பகுதியில் சாலை பணியும் நிறைவடையவில்லை. இந் நிலையில், நாகர்கோவில் நான்கு வழிச்சாலையில் ஜோதிபுரம் அருகே, 'அம்பாசமுத்திரம், தென்காசி, குற்றாலம் செல்ல இந்த வழி' என, பெரிய அ ளவில் பெயர்ப்பலகை யை, நெடுஞ்சாலைத்துறை வைத்துள்ளது.
இதை நம்பி, வெளியூர் வாகன ஓட்டிகள் அந்த சாலையில் செல்லும் போது, 3 கி.மீ.,க்கு பின், சாலை பணிகள் முடிக்கப்படாத பகுதியில் சிக்கி, திரும்புகின்றனர்.
இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்திக்கின்றனர். சாலை பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை, வழிகாட்டி பெயர்ப்பலகைகளை அகற்ற, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

