தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/காங்., - எம்.பி., கார்த்தி அலுவலகத்தில் குண்டு வீச்சு: தலைவர்கள் கண்டனம்

காங்., - எம்.பி., கார்த்தி அலுவலகத்தில் குண்டு வீச்சு: தலைவர்கள் கண்டனம்

காங்., - எம்.பி., கார்த்தி அலுவலகத்தில் குண்டு வீச்சு: தலைவர்கள் கண்டனம்


ADDED : மார் 12, 2026 06:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 06:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

-- நமது நிருபர் -

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி., கார்த்தி அலுவலகத்தில், மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காரைக்குடி சுப்ரமணியபுரம் முதல் வீதியில் கார்த்தி எம்.பி.,யின் அலுவலகம் உள்ளது. எம்.பி., அலுவலக ஊழியர்கள் நேற்று காலை வழக்கம் போல் அலுவலகத்தை திறந்தனர். அப்போது, வாசலில் மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்டிருப்பதை கண்டனர். இது குறித்து கட்சியினர் போலீசில் தகவல் சொல்ல, சம்பவ இடத்துக்கு வந்து போலீசார் விசாரித்தனர்.



சம்பவம் குறித்து, கார்த்தி ஆதரவாளர்கள் கூறியதாவது: ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி, இஸ்ரேல் - அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் இறந்தார். இதை கண்டித்து, தமிழகத்தில் உள்ள முஸ்லிம்கள், சென்னை உள்ளிட்ட பல இடங்களில் போராட்டம் நடத்தினர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த சிவகங்கை தொகுதி காங்., - எம்.பி.,யான கார்த்தி, 'ஈரானில் நடந்த ஒவ்வொரு கொடூரத்தையும் படித்து பார்க்க வேண்டும். கமேனி சாதாரண நபர் அல்ல; ஹிட்லர் போல கொடுங்கோலராகத் திகழ்ந்தவர். ஈரான் மீது அமெரிக்கா, காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதையும், வெனிசுலா அதிபரை கடத்தியதையும் கண்டிக்காமல் எப்படி இருக்க முடியும்?

'அதே நேரத்தில், ஈரான் நாட்டு மக்கள் மீது எனக்கு ஆதரவும், அனுதாபமும் உள்ளது. அயதுல்லாக்களின் ஆட்சியின் மூலம் ஈரான் மக்கள் எத்தனை பேர் துாக்கிலிடப்பட்டனர் என்பதையும் பார்க்க வேண்டும். தலிபான், அயதுல்லாக்களின் செயல்களை நான் எதிர்க்கிறேன். அதே நேரம், நான் இஸ்லாமியர்களுக்கு எதிரானவன் அல்ல' என கூறியிருந்தார்.

இந்த கருத்து, முஸ்லிம்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியது. உடனே, சிவகங்கை அரண்மனை பகுதியில் திரண்ட பல்வேறு முஸ்லிம் அமைப்பினர், எம்.பி., கார்த்திக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர் தன் கருத்தை வாபஸ் பெறுவதோடு, மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும் வலியுறுத்தினர். அனுமதியின்றி நடந்த இந்த போராட்டத்தை, அரசு தரப்பில் கண்டுகொள்ளவில்லை.

கார்த்தி மீதான எதிர்ப்பை கைவிடாத முஸ்லிம் அமைப்பினர், அவர் மீதான அவதுாறு பிரசாரங்களை தொடர்ந்து முன்னெடுத்தனர். இந்நிலையில் தான், நேற்று கார்த்தியின் சிவகங்கை எம்.பி., அலுவலகத்தில் அடையாளம் தெரியாத நபர்கள், மண்ணெண்ணெய் குண்டு வீசியுள்ளனர். இது, கமேனிக்கு ஆதரவாக ஊர்வலம் நடத்தியோரை விமர்சித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்டது என சந்தேகிக்கப்படுகிறது. அதனால் போலீசார், இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது; முறையாக விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

யாருக்கும் பாதுகாப்பில்லை!


தி.மு.க., கூட்டணி கட்சி எம்.பி., ஒருவருக்கே, தமிழகத்தில் பாதுகாப்பில்லையா? ஆட்சி பொறுப்பேற்ற கடந்த ஐந்து ஆண்டுகளில், முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினரை தவிர, வேறு யாருக்குமே பாதுகாப்பில்லை என்பதை, கார்த்தி அலுவலகத்தில் நடந்த தாக்குதல் சம்பவம், மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தி உள்ளது.
- தினகரன், பொதுச்செயலர், அ.ம.மு.க.,



வெட்கக்கேடான விஷயம்!


கார்த்தி எம்.பி., அலுவலகம் உள்ள பகுதியில் கண்காணிப்பு 'கேமரா'க்கள் இல்லை. எனவே, பெட்ரோல் குண்டு வீசியவர்கள் யார் என்பதை காவல் துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது வெட்கக்கேடு. முக்கிய பிரமுகர்களின் அலுவலகங்கள் உள்ள பகுதிகளில், கண்காணிப்பு கட்டமைப்புகள் அமைக்க வேண்டும் என்ற அடிப்படை புரிதல்கூட இல்லாமல் தான் தி.மு.க., அரசு செயல்படுகிறது.
-அன்புமணி, தலைவர், பா.ம.க.,



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us