செங்கல்பட்டு அருகே கடம்பூரில் 138 ஏக்கரில் தாவரவியல் பூங்கா: அடுத்த ஆண்டில் பணி துவக்கம்
செங்கல்பட்டு அருகே கடம்பூரில் 138 ஏக்கரில் தாவரவியல் பூங்கா: அடுத்த ஆண்டில் பணி துவக்கம்
ADDED : செப் 08, 2025 01:48 AM

ஐந்து வகை நிலங்களின் தாவரங்களை ஒரே இடத்தில் வளர்க்கும் வகையில், செங்கல்பட்டு அடுத்த கடம்பூரில் தாவரவியல் பூங்கா அமைக்கும் பணிகளை வனத்துறை துவக்கி உள்ளது.
நிலங்களை அவற்றின் தன்மை, பயன்பாடு அடிப்படையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகையாக தமிழர்கள் பிரித்தனர். இந்த நிலங்களில், மக்களின் வாழ்வியல் வேறுபட்டு காணப்படும் என்பது சங்க இலக்கியங்களிலேயே தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதுபோல, இந்த நிலங் களில் காணப்படும் தாவ ரங் களும் வேறுபட்டு காணப் படும். ஒரு வகை நிலத்தில் இருக்கும் தாவரம், வேறு நிலத்தில் இருக்காது.
அரசு திட்டம் இந்நிலையில், ஐ வகை நிலங்களில் காணப்படும் தாவரங்களை, ஒரே இடத்தில் வளர்த்து, மக்களுக்கு காட்சிப்படுத்த வனத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான பணி, செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் அடுத்த கடம்பூரில் துவங்க உள்ளது என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து, வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடம்பூரில் 138 ஏக்கர் நிலத்தில், 300 கோடி ரூபாய் செலவில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும் என்று தமிழக அரசு 2022ல் அறிவித்தது.
அதாவது, இங்கிலாந்தின் கியூ நகரில் உள்ள, 'ராயல் பொட்டானிக் கார்டன்ஸ்' போல, கடம்பூர் தாவரவியல் பூங்காவை தமிழக அரசு அமைக்க திட்டமிட்டது.
இதற்காக, 'கியூ ராயல் பொட்டானிக் கார்டன்ஸ்' நிர்வாகத்துடன், 2023 ஜூலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதையடுத்து, 'வெஸ்ட் - 8' எனப்படும் தனியார் நிறுவனம் வாயிலாக, இதற்கான முழுமை திட்டம் தயாரிக்கப்பட்டது.
விரைவில் அடிக்கல் இந்நிலையில், கடம்பூர் தாவரவியல் பூங்காவுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது. அடுத்த ஆண்டில் பூங்கா அமைக்கும் பணி துவங்க உள்ளது.
இந்த தாவரவியல் பூங்காவில் ஒரு பூர்வீக இன தோட்டம், மூலிகை தோட்டம், பல்வேறு சூழல் மற்றும் காலநிலை உள்ள பகுதிக்கான அடையாளமாக கருதப்படும் தாவரங்களை, ஒரே இடத்தில் வளர்க்கும் ஆர்போரேட்டம், மூங்கில் தோட்டம், ரோஜா தோட்டம், ஜப்பானிய தோட்டம் போன்றவை அமைய உள்ளன.
இவற்றுடன் தமிழகத்தின் ஐ வகை நிலங்களை சித்தரிக்கும் நிலப்பரப்பை ஒரே இடத்தில் உருவாக்கி, அதில் அந்தந்த பகுதிக்கான தாவரங்களையும் வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -