UPDATED : ஜன 12, 2026 02:17 PM
ADDED : ஜன 12, 2026 05:08 AM

லஞ்சப் பேர்வழிகளை அம்பலப்படுத்த, 'லஞ்சம் - என்னிடம் பறித்தனர் பகுதி மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. இப்பகுதி திங்கள்தோறும் 'தினமலர்' இதழில் வெளியாகும். வாசகரின் இந்த வார உள்ளக்குமுறல் இதோ:
பெயர் வெளியிட விரும்பாத தொழில்முனைவோரின் ஆதங்கம்:
கோவை, மாநகராட்சி 51வது வார்டு, சவுரிபாளையத்தில் வசிக்கிறேன். தந்தையுடன் இணைந்து 20 ஆண்டுகளாக புக் பைண்டிங் தொழில் செய்கிறேன். கலெக்டர் அலுவலகத்தில் உரிமம், மாவட்ட தொழில் மையத்தில் பதிவு, மாநகராட்சி தொழில் வரி பிரிவு என, முறையாக பதிவு செய்துள்ளோம்.
கடந்த ஜனவரியில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர், உதவியாளர் ஆகியோர் அலுவலகத்துக்கு வந்து, அச்சகத்தில் ஆய்வு செய்தனர். உரிமங்களை காண்பித்தேன். மாநகராட்சி 'ரன்னிங் லைசென்ஸ்' பெற வேண்டும் என வலியுறுத்தினர். கட்டண விவரம் கூறாமல் பீளமேடு 51வது வார்டு சுகாதார அலுவலகத்துக்கு வரக்கூறினர். 2 நாட்களுக்குப் பின் உதவியாளர் வந்து அவசரப்படுத்தினார். உடனடியாக வரச்சொன்னதால், அவர்கள் கேட்ட ஆவணங்களுடன் சென்றேன்.
அங்கு 'திருமுருகன்' என்பவர் அமர்ந்திருந்தார். தனது பதவியை அவர் கூற மறுத்துவிட்டார். 20 ஆண்டுகளாக அச்சகம் நடத்துவதால் ரூ.10 ஆயிரம் கட்டச்சொன்னார். 'ஆய்வாளர் அப்படிக் கூறவில்லை. லைசென்ஸ் மட்டும் தானே எடுக்க வேண்டும்' என்றபோதும் அவர் பேரம் பேசத் தொடங்கினார்.
பின், அபராத தொகையுடன் சேர்த்து மொத்தம் ரூ. 2,500 சேர்த்து வாங்கிக் கொண்டார். ரசீது கேட்டும் தரவில்லை. கமிஷனரிடம் புகார் தெரிவிப்பேன் என்றபோதும் அவர் அசரவில்லை. 'நான்தான் ரசீது” எனக்கூறி அனுப்பி விட்டார். 10 நாட்களுக்குப் பிறகும் லைசென்ஸ் வரவில்லை. தொலைபேசியில் தொடர்பு கொண்டும் பயனில்லை.
25 நாட்களுக்குப் பிறகு சுகாதார உதவியாளர் லைசென்ஸ் கொண்டு வந்தார். அதில் கமிஷனர் கையொப்பம் கூட இல்லை. 'நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல்' என வரிப்புத்தகம் கொடுத்துள்ளனர். ரசீதில் ரூ.875 மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது. மாநகராட்சி முழுக்க உணவகங்கள், அலுவலகங்கள் என அனைத்தும் இதே கதிதான்.
ஒரு முறை உரிமம் என மாற்ற வேண்டும். வெளிப்படைத் தன்மை இல்லை. பெரும் கொள்ளையாக இருக்கிறது.
தொடரும்...
![]() |


