பட்ஜெட் தாக்கல்: நிர்மலா சீதாராமன் எதிர்கொள்ளும் மூன்று பிரச்னைகள்
பட்ஜெட் தாக்கல்: நிர்மலா சீதாராமன் எதிர்கொள்ளும் மூன்று பிரச்னைகள்
ADDED : நவ 16, 2025 01:33 AM

புதுடில்லி: பட்ஜெட் தலைவலி! வ ரும், 2026 - -27ம் ஆண்டிற்கான பட்ஜெட் தயாரிப்பில் படு பிஸியாக உள்ளார், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். ஆனால், இவருக்கு மூன்று விஷயங்களில் பெரும் பிரச்னை.
முதலாவது, வழக்கமாக பட்ஜெட் பிப்., 1ம் தேதி பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும். ஆனால், அடுத்த ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி ஞாயிற்றுக் கிழமை.
அன்று எப்படி தாக்கல் செய்வது? ஜனவரி 31ம் தேதி சனிக்கிழமை அல்லது பிப்ரவரி 2ம் தேதி திங்களன்று பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும்.
ஞாயிறன்று தாக்கல் செய்வதாக இருந்தால், பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தைக் கூட்ட வேண்டும். இந்த பிரச்னையை பிரதமர் மோடியிடம் சொன்னாராம் நிதி அமைச்சர். 'நீங்கள் கவலைப்பட வேண்டாம்; இதை நான் பார்த்துக் கொள்கிறேன்' என, பதில் அளித்தாராம் மோடி.
இரண்டாவது பிரச்னை, பட்ஜெட்டை எங்கே பிரின்ட் செய்வது? நிதி அமைச்சகம், தற்போது டில்லியின் நார்த் பிளாக்கிலிருந்து, புதிதாக கட்டப்பட்டுள்ள, கர்த்தவ்ய பவனுக்கு மாறிவிட்டது. வழக்கமாக, நார்த் பிளாக்கின் பேஸ்மெண்டில் தான் பட்ஜெட் பிரின்ட் செய்வர். இப்போது என்ன செய்யலாம்?- 'இதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம்; என்னிடம் விட்டுவிடுங்கள்' என்றாராம் மோடி.
மூன்றாவது, அல்வா கிண்டுவது. பட்ஜெட் வேலைகளை துவங்குவதற்கு முன், அல்வா- கிண்டுவது வழக்கம். நிதி அமைச்சர் மற்றும் அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பர்; இதை ராகுல் எதிர்க்கிறார். 'அல்வா கிண்டும் நிகழ்ச்சியில், ஒருவர் கூட பின் தங்கிய அல்லது தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் இல்லை' என்பது ராகுலின் குற்றச்சாட்டு. இந்த பிரச்னையையும் தீர்ப்பதாக, நிர்மலா சீதாராமனிடம் உறுதி அளித்துள்ளாராம் மோடி.

