UPDATED : ஏப் 09, 2025 04:05 AM
ADDED : ஏப் 09, 2025 02:33 AM

பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் பல லட்சம் கோடி ரூபாய் இழப்பில் தவித்து கொண்டிருக்கின்றனர்.
பங்குச் சந்தையில் மட்டுமல்ல; தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தவர்கள் நிலையும் அதேதான். அதுமட்டுமா? கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்தவர்கள் பாடும் அதே கதிதான். இன்னொருபுறம், கச்சா எண்ணெய் விலையும் கடந்த நான்கு ஆண்டுகளில் காணாத பெரும் வீழ்ச்சியைக் கண்டிருக்கிறது.
வரிப்போர்
அனைத்து வீழ்ச்சிகளுக்கும் காரணம், உலக நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடுத்திருக்கும், 'வரிப்போர்' தான்.
இந்நிலையில், பங்குச்சந்தை மீண்டெழுமா; எப்போது எழும்; இதற்கு மேலும் விழுமா, விழாதா; இதுதான் வாங்குவதற்கான தருணமா; இல்லை, மேலும் கரடியின் ஆதிக்கமே தொடருமா; முதலீடு செய்தவர்கள் என்ன செய்ய வேண்டும்? என, இதுபோன்ற பல கேள்விகள் முதலீட்டாளர்கள் மனதில் எழுந்து, விடை அறியாமல் திகைத்து நிற்கின்றனர்.
உண்மையை சொல்ல வேண்டுமெனில், இதற்கான விடை தெரிந்தவர்கள் யாரும் இல்லை. இப்படி நடக்கலாம்; அப்படி நடக்கலாம் என, உத்தேசமாக கணித்து வேண்டுமானால் சொல்லலாம்.
ஆயுதங்களை கொண்டு தொடுத்த போர்கள் எல்லாம் பின்னுக்கு தள்ளப்பட்டு, இப்போது வர்த்தகப்போர் காலம் வந்துவிட்டது. மற்ற நாடுகளின் நிதி ஆதாரத்தையும் உற்பத்தி மற்றும் வியாபார வலிமையையும் தன் கட்டுக்குள் கொண்டுவர தொடுக்கப்படும் போர் இது.
அமெரிக்கா தொடுத்துள்ள இந்த வகையான போரில், வலிமைமிக்க சீனா போல எதிர்த்து மல்லுக்கட்டுவோர் ஒருபுறமும், மிரட்டலுக்கு பயந்து, அடிபணிந்து வரிகளைக் குறைக்கும் வியட்நாம் போன்ற நாடுகள் மறுபுறமும் இருக்க, இந்தியா போன்ற நாடுகள் இருதரப்பு வர்த்தக பேச்சுக்கு தயாராகி வருகின்றன.
இந்த வகை போரில் ஒரு முரண் என்னவென்றால், போருக்கு இலக்காகும் நாட்டுக்கு மட்டுமல்ல; போர் தொடுக்கும் நாட்டுக்கும் அதிக இழப்பு இருக்கும் என்பது தான்!
பெரும்பாலான பொருட்களுக்கு உள்நாட்டு உற்பத்தி தொழிற்சாலைகள் இல்லாத சூழலில், இறக்குமதியை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய அமெரிக்கா, வரும் நாட்களில் கடும் பணவீக்கம், அதிக இறக்குமதி தீர்வை சுமையால் விலைவாசி ஏற்றம், அதன் காரணமாக மீண்டும் வட்டிவிகிதம் அதிகரிப்பு, நிறுவனங்களின் லாபம் பாதிப்பு, வேலை இழப்பு என பொருளாதார தேக்கநிலைக்கு கூட உள்ளாகக்கூடும்.
உள்ளூர் உற்பத்தி
இதெல்லாம் அமெரிக்காவுக்கு தெரியாதா என்றால், தெரியும்தான். அவர்கள் இப்போது ஒரு சூதாட்டம் ஆடிப்பார்க்கின்றனர். உள்ளூர் உற்பத்தி குறைந்துபோய், உலக நாடுகளிடமிருந்து தொடர்ந்து பொருட்களை இறக்குமதி செய்து, இன்றைய தேதியில் உலகின் மிகப்பெரிய கடனாளியாக இருக்கிறது அமெரிக்கா. என்றாவது ஒருநாள் இந்த கடன்களை திருப்பி அடைத்தாக வேண்டுமல்லவா?
இப்பிரச்னைகளை தீர்க்க, வெள்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவராக இருக்கும் ஸ்டீபன் மிரான் ஒருசில வழிமுறைகளை வழங்கினார். 'A User's Guide to Restructuring the Global Trading System' எனும், 41 பக்கங்கள் கொண்ட தீர்வு அது. 'மார் -- எ - -லாகோ அக்கார்ட்' என குறிப்பிடப்படுகிறது அது.
அதன் ஒரு பகுதிதான் இந்த வரிவிதிப்பு. கூடுதலாக, டாலரின் மதிப்பைக் குறைப்பதும் இதன் ஒரு அங்கம். இதன் வாயிலாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து, டாலரில் பணத்தை பெறும் நாடுகளுக்கும் அந்த நிறுவனங்களுக்கும் லாபத்தை மறைமுகமாக குறைப்பதும், அமெரிக்காவின் உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிப்பதும் இதன் அடுத்தக்கட்ட செயல்திட்டமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
உலகில் இதுவரை இருசாரார் என இருந்த நிலை மாறி, பலமுனைகளில் இந்த போர் நிகழும்; அதற்கான தீர்வுகளும் வெவ்வேறானவை, அந்தந்த நாடுகளின் சக்தி மற்றும் திறனைப் பொறுத்தது.
ஆரம்பகால வீராவேச வசனங்களும் ஏச்சுகளும் மட்டுப்பட்ட பின், உண்மை உரைக்கும்போது நிதர்சனம் வெல்லும். இதில், அமெரிக்கா எவ்வளவு வெற்றிபெறும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால், பங்குச் சந்தைகள் அதற்காக காத்திருப்பதில்லை.
குறியீடுகள்
ஒன்று மட்டும் நிச்சயம்... எல்லா போர்களுக்கும் முடிவு ஒன்று உண்டு. எவ்வளவுக்கு எவ்வளவு விரைவாக அது அமைகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு எல்லோருக்கும் நல்லது.
பெரும்பாலான நாடுகள், அடுத்த ஓரிரு மாதங்களில் சுமுகமாக தீர்வு கண்டால் கூட, ஆச்சரியப்படுவதற்கில்லை. பல்வேறு நகர்வுகளை அவதானிக்கும்போது, அதற்கான சாத்தியம் அதிகம் இருப்பதாகத்தான் தெரிகிறது.
கடந்த 2020-ல் துவங்கி, நான்கு ஆண்டுகளாக ஏற்றத்தில் தொடர்ந்த பங்குச் சந்தைக்கு, நின்று நிதானித்து செல்ல, இந்த காலகட்டம் உதவும். நிறுவனங்களின் உண்மையான நிதி செயல்பாடுகளுக்கு ஏற்ப பங்குகளின் விலை அமைய, இந்த நிதானம் அவசியம் தேவை.
அவ்வப்போது மட்டுப்பட்டாலும், வேகம் குறைந்தாலும், நீண்டகால அடிப்படையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஏற்றத்திலேயே அமையும். இந்தியாவின் உழைக்கும் வர்க்கமும், இளைய சமுதாயமுமே அதற்கு முக்கிய காரணமாக இருக்கும்.
கட்டுக்குள் இருக்கும் பணவீக்கம், சேவை மற்றும் உற்பத்திக்கான பி.எம்.ஐ., குறியீடுகள், தொழில் துறை உற்பத்தி குறியீடு, மொத்த உள்நாட்டு உற்பத்தி, அதிகரிக்கும் எரிபொருள் நுகர்வு என, பெரும்பாலான பொருளாதார குறியீடுகளும் இதை உறுதிப்படுத்துவதாக உள்ளன.
சிறிய ஓய்வு
இன்னும் கொஞ்ச நாட்கள் வேண்டுமானாலும் காளை ஓய்வெடுக்கட்டும். ஆனால், கரடியின் ஆதிக்கம் ஒருசில மாதங்களே இருக்கலாம் என்பதே பொதுவான கணிப்பு. சிறிய ஓய்வுக்குப் பின், மீண்டும் புத்துணர்ச்சியோடு காளையின் ஓட்டம் ஆரம்பிக்கலாம்.
முன்பு வாய்ப்பை தவறவிட்ட முதலீட்டாளர்களுக்கு சந்தை மீண்டும் ஓர் ஆடித் தள்ளுபடி வாய்ப்பை கொடுத்திருக்கிறது. வழக்கம்போல, இப்போது துாங்கிவிட்டு, பின்னர் வருத்தப்படாதீர்கள்!
- வ.நாகப்பன்,
நிதி ஆலோசகர்.