தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/தொழில் கொள்கைகள் போதும், செயல்பாடு தான் தேவை

தொழில் கொள்கைகள் போதும், செயல்பாடு தான் தேவை

தொழில் கொள்கைகள் போதும், செயல்பாடு தான் தேவை


ADDED : மே 11, 2026 05:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 11, 2026 05:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம் நாடு மீண்டும் தொழில் துறை கொள்கைக்கு திரும்புகிறதா என்ற கேள்வி, கடந்த 10 ஆண்டுகளாக அரசியல் மற்றும் பொருளாதார விவாதங்களில் தொடர்ந்து கேட்கப்பட்டு வருகிறது. 1991 பொருளாதார சீர்திருத்தங்களுக்கு பின், அரசு தன் கட்டுப்பாட்டை அதிகமாக இழந்து விட்டதாகவும்; மீண்டும் தொழில் துறையின் இயக்குநராக அரசு மாற வேண்டும் என்றும் ஒரு தரப்பு வலியுறுத்துகிறது. மற்றொரு தரப்பு, அரசு மீண்டும் அதிக கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டால், 'லைசென்ஸ் ராஜ்' காலத்தின் தோல்விகள் திரும்பும் என்று எச்சரிக்கிறது.

ஆனால், நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன், இந்த விவாதத்தை முற்றிலும் வேறு கோணத்தில் பார்க்கிறார். 'குரோத் இஸ் குட்' என்ற பொருளாதார கலந்துரையாடலில் பேசிய அவர், நம் நாட்டின் உண்மையான பிரச்னையாக தொழில் துறை கொள்கை இருந்ததா, இல்லையா என்பது அல்ல; அது எவ்வாறு செயல்படுத்தப்பட்டது என்பதுதான் என்கிறார்.

அரசின் தலையீடு


கடந்த 1991 சீர்திருத்தங்களுக்கு பின், இந்தியா சுதந்திர சந்தை பொருளாதாரத்துக்கு திரும்பியது என்ற பொதுவான நம்பிக்கையை அனந்த நாகேஸ்வரன் மறுக்கிறார். அவரது பார்வையில் அரசு தொடர்ந்து பல துறைகளில் தலையீடு செய்து கொண்டே இருந்தது.

மானியங்கள், பாதுகாப்பு வரிகள், சிறு தொழில்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள், கடன் திட்டங்கள் என அரசின் பங்கு குறையவில்லை; மாறியது அதன் மொழியும் தோற்றமுமே.

சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு இந்தியா பல தசாப்தங்களாக பாதுகாப்பு அளித்தது. ஆனால், அதன் விளைவு எதிர்மாறாக அமைந்தது. இப்போது, நம் நாட்டில் கோடிக்கணக்கான சிறு நிறுவனங்கள் உள்ளன; சில பெரிய நிறுவனங்களும் உள்ளன. ஆனால், இரண்டுக்கும் இடையில் வளரும் நடுத்தர நிறுவனங்கள் மிகவும் குறைவு. இதையே பொருளாதார நிபுணர்கள், 'மிஸ்ஸிங் மிடில்' என்று குறிப்பிடுகின்றனர்.

போட்டி அவசியம்


''பிரச்னை, என்ன செய்தோம் என்பதில் இல்லை; எப்படி செய்தோம் என்பதில்தான் உள்ளது,'' என்று அனந்த நாகேஸ்வரன் கூறுகிறார். நம் நாட்டின் பழைய தொழில் துறை அணுகுமுறையை விளக்க, அவர் பயன்படுத்திய உவமை பலரின் கவனத்தை ஈர்த்தது.

''ஒரு குழந்தை தன்னம்பிக்கையுடன் வளர வேண்டுமெனில், அதை எப்போதும் பாதுகாப்பில் வைத்திருக்க முடியாது. போட்டியில் நிறுத்த வேண்டும். ஆதரவு கொடுக்கலாம்; ஆனால், போட்டியிலிருந்து காக்கக்கூடாது,'' என்று அவர் கூறினார்.

அதாவது, இந்தியா பல ஆண்டுகளாக சிறு தொழில்களை பாதுகாப்பு சுவர்களுக்குள் வைத்தது; வெளிநாட்டு போட்டியிலிருந்து காத்தது. அதன் விளைவாக, அந்த நிறுவனங்கள் உலகத் தரத்துக்கு வளர வேண்டிய அவசியமே இல்லாமல் போனது. 1991க்கு பின் சந்தை திறந்தபோது, அவை போட்டியை சமாளிக்க தயாராக இல்லை.

அனந்த நாகேஸ்வரனின் கருத்துகளில் முக்கியமான ஒன்று, ஜவஹர்லால் நேருவை பற்றியது. இந்திய வலதுசாரி அரசியல் பொதுவாக நேருவின் பொருளாதார மாதிரியை சோஷலிச தோல்வியாக விமர்சிக்கிறது. ஆனால், நாகேஸ்வரன் வேறு பார்வையை முன்வைக்கிறார்.

''நேருவின் முதன்மை இலக்கு பொருளாதார வளர்ச்சிதான். தவறு அவரது நோக்கத்தில் இல்லை; அவர் தேர்ந்தெடுத்த கருவிகளில்தான் இருந்தது,'' என்று அவர் கூறுகிறார்.

தொழில் துறை கொள்கை தவறல்ல. ஆனால், தவறான கருவிகள் பயன்படுத்தப்பட்டால், அவை அரசியல் நலன்களாக மாறி நீண்டகால சுமையாகிவிடும். இந்தியாவின் லைசென்ஸ் ராஜ் அமைப்பு அதற்கு சான்று என்பது இதன் பொருள்.

கிழக்கு ஆசிய நாடுகள்


நாகேஸ்வரன் தன் கருத்தை வலுப்படுத்த, கிழக்கு ஆசிய நாடுகளின் அனுபவத்தை எடுத்து காட்டுகிறார். ஜப்பான், தென் கொரியா, தைவான், சிங்கப்பூர் போன்ற நாடுகள் 1950 - 1980 காலகட்டத்தில் தீவிர தொழில் துறை கொள்கைகளை பின்பற்றின.

அரசு துறைகளை தேர்ந்தெடுத்தது, கடன்களை வழி நடத்தியது, உள்நாட்டு நிறுவனங்களை பாதுகாத்தது. ஆனால், இந்நாடுகள் உலகின் முன்னணி உற்பத்தி மையங்களாக மாறின.

அதே காலத்தில் பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, மலேஷியா போன்ற நாடுகளும் இதே போன்ற கொள்கைகளை பயன்படுத்தின. ஆனால், அவை எதிர்பார்த்த வளர்ச்சியை அடையவில்லை. ஏன் இந்த வேறுபாடு என்ற கேள்விக்கு அனந்த நாகேஸ்வரனின் பதில், ஒழுக்கம்!”.

மீண்டும் வாய்ப்பு


இதில், இந்தியாவுக்கு மீண்டும் வரலாற்று வாய்ப்பு கிடைத்தது. 2001ம் ஆண்டு சீனா டபிள்யு.டி.ஓ.,வில் இணைந்த பின், உலக உற்பத்தி துறையில் புதிய நாடுகளுக்கு வாய்ப்பு குறைந்து விட்டதாக பலர் கருதினர். ஆனால், கடந்த சில ஆண்டுகளில் உலகளாவிய சூழல் மாறிவிட்டது.

பிரெக்சிட், அமெரிக்கா -- சீனா வர்த்தக மோதல், கொரோனா கால வினியோக தொடர் பிரச்னைகள், உக்ரைன் போர் ஆகியவை உலகமயமாக்கலின் பலவீனங்களை வெளிப்படுத்தின.

இதன் விளைவாக அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகள் அனைத்தும் மீண்டும் தொழில் துறை கொள்கைகளில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியுள்ளன. இந்த சூழலில், இந்தியாவுக்கு புதிய வாய்ப்பு உருவாகியுள்ளது.

பி.எல்.ஐ., திட்டம்


இந்தியாவின் முக்கிய தொழில் துறை முயற்சிகளில் ஒன்றான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தை அனந்த நாகேஸ்வரன் நேர்மறையாக மதிப்பிடுகிறார்.

இந்த திட்டத்தில், நிறுவனங்களுக்கு முன்கூட்டியே அரசு மானியம் வழங்காது. உற்பத்தி இலக்கை அடைந்த பிறகே ஊக்கத்தொகை வழங்கப்படும். இதனால், அரசின் ஆபத்து குறைகிறது; நிறுவனங்கள் திறனை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

மொபைல் போன் உற்பத்தி மற்றும் மின்னணு துறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், சில துறைகள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. உண்மையான சோதனை, தோல்வியடைந்த திட்டங்களை அரசு நிறுத்த தயங்குமா என்பதில்தான் உள்ளது.

சுங்க வரி அபாயம்


அனந்த நாகேஸ்வரன் எச்சரிக்கும் முக்கிய பகுதி, சுங்க வரிகள் மற்றும் பொருள் குவிப்புக்கு எதிரான பாதுகாப்பு. இந்த பாதுகாப்பு, உடனடி நன்மையை அளிப்பதால் அரசியல் ரீதியாக கவர்ச்சியாக இருக்கும். ஆனால், அவை நீண்ட காலத்தில் போட்டித்திறனை குறைக்கலாம். ஒரு துறையை காப்பாற்றும் நடவடிக்கை, இன்னொரு துறையின் வளர்ச்சியை மறைமுகமாக தடுக்கக்கூடும்.

இந்தியாவின் சமீபத்திய வரி அமைப்புகள் அதிக பாதுகாப்பு நோக்கத்துக்கு சென்றுள்ளதாக பொருளாதார வட்டாரங்களில் கவலை எழுந்துள்ளது.

திருப்பூர் மாடல்


திருப்பூர் ஆடைத்தொழில் குழுமம், இந்திய தொழில் துறை வளர்ச்சிக்கான முக்கிய எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது. நுாற்றுக்கணக்கான சிறு நிறுவனங்கள் ஒன்றிணைந்து, பல பில்லியன் டாலர் மதிப்புள்ள உற்பத்தி வலையமைப்பாக செயல்படுகின்றன.

ஆனால், திருப்பூரின் ஏற்றுமதி அளவு இன்னும் வங்கதேசத்தின் டாக்கா ஆடைத்தொழில் மையத்தை விட மிகவும் குறைவு. இதனால், இந்திய தொழில் துறை இன்னும் உலகளாவிய அளவில் முழுமையாக போட்டியிடவில்லை என்பது தெளிவாகிறது.

தென் கொரியா போல் ஒழுக்கத்துடன் நம் நாடு செயல்படுமா? அல்லது பாதுகாப்பு மற்றும் அரசியல் நலன்களில் சிக்கிக் கொள்ளுமா என்பதே முக்கிய கேள்வி.

தேவையான நேரத்தில் மானியங்களை அரசு நிறுத்துமா? தோல்வியடைந்த நிறுவனங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தராமல் இருக்குமா? உலகத் தரத்தில் போட்டியிடாத துறைகளை மறுசீரமைக்குமா?

இந்த கேள்விகளுக்கான பதில்தான், இந்தியாவின் அடுத்த பொருளாதார அத்தியாயத்தை நிர்ணயிக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us