வரி செலுத்த வணிகர்கள் அடம்: சொத்துக்களை முடக்க முடிவு?
வரி செலுத்த வணிகர்கள் அடம்: சொத்துக்களை முடக்க முடிவு?
UPDATED : ஜன 06, 2024 05:11 AM
ADDED : ஜன 05, 2024 11:59 PM

சென்னை: அபராதம் தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகளுடன் கூடிய சமாதான திட்டத்தை அறிமுகம் செய்தும், வரி நிலுவையை செலுத்த, வணிகர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே, அவர்களின் சொத்துக்களை முடக்கி, ஏலம் விட்டு, வரி நிலுவையை வசூலிக்க, வணிக வரித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக, வரி நிலுவை வைத்திருப்போரின் சொத்து விபரம் சேகரிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.
தமிழக வணிக வரித்துறைக்கு, 1.42 லட்சம் வணிகர்கள் மற்றும் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரி நிலுவை தொடர்பாக, 2.11 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்களிடம் இருந்து, எளிய முறையில் வரி நிலுவையை வசூலிக்க, 2023 அக்., 16ல் சமாதான திட்டம் துவக்கப்பட்டது.
அத்திட்டத்தில், 50,000 ரூபாய்க்கு குறைவான வரி மற்றும் அபராதம் செலுத்த வேண்டிய, 95,000 வணிகர்களுக்கு நிலுவை தொகை முழுதும் தள்ளுபடி செய்யப்பட்டு, சான்று வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல, ஒவ்வொரு பிரிவுக்கும் அதிக தள்ளுபடி சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அரசு அறிவித்துள்ள இந்த சமாதான திட்டம், பிப்., 15 வரை தான் நடைமுறையில் இருக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், சென்னையில் நேற்று வணிக வரித்துறையின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. துறை அமைச்சர் மூர்த்தி, செயலர் ஜோதிநிர்மலா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். பல முறை, 'நோட்டீஸ்' அனுப்பியும், இன்னும் பலர் வரி நிலுவையை செலுத்தாமல் உள்ளனர்.
அதிலும் பலர், அதிக சொத்துக்களை வைத்திருந்து, வரி செலுத்தாமல் இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது.
எனவே, அவர்களின் சொத்துக்களை முடக்கி, ஏலம் விட்டு, வரி நிலுவையை வசூலிக்க, கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, வரி நிலுவை வைத்துள்ள வணிகர்களின் சொத்து விபரங்களை சேகரிக்கும் பணியை, பதிவுத் துறை வாயிலாக அதிகாரிகள் துவக்கியுள்ளனர்.