ADDED : ஜன 22, 2025 04:41 AM

சென்னை : பலமான போட்டி இல்லாததால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரத்தை தவிர்க்க, முதல்வர் ஸ்டாலின் முடிவெடுத்துஉள்ளார்.
காங்., - எம்.எல்.ஏ.,வாக இருந்த இளங்கோவன் மறைவை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு, பிப்., 5ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில், தி.மு.க., வேட்பாளராக சந்திரகுமார் களமிறக்கப்பட்டு உள்ளார்.
அ.தி.மு.க., - பா.ஜ., - தே.மு.தி.க., உள்ளிட்ட பல கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன. தி.மு.க.,வை எதிர்த்து, நாம் தமிழர் கட்சி களமிறங்கியுள்ளது. அக்கட்சி வேட்பாளராக சீதாலட்சுமி நிறுத்தப்பட்டு உள்ளார்.
தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி உள்ளிட்டோர் பிரசாரம் செய்யும் வகையில், திட்டம் வகுக்கப்பட்டு இருந்தது. ஆனால், களத்தில் பலமான போட்டி இல்லாததால், தேர்தல் பிரசாரத்தை தவிர்க்க, முதல்வர் ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் கள நிலவரத்தை பொறுத்து, இறுதிக்கட்ட பிரசார பொதுக்கூட்டத்தில், முதல்வரை பங்கேற்க வைக்க, தேர்தல் பொறுப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.