ADDED : டிச 17, 2024 03:42 AM

சென்னை: “திருமாவளவன் விமர்சனத்தை அறிவுரையாக பார்க்கிறேன். அவரிடமிருந்து கள அரசியலை நிறைய கற்றுள்ளேன். கொள்கை சார்ந்த அரசியலில் அவரை சார்ந்தே என் பயணம் இருக்கும்,” என, ஆதவ் அர்ஜுனா கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி:
திருமாவளவன் வார்த்தைக்கு நான் எப்போதும் கட்டுப்படுவேன், அவரது வாழ்த்து மற்றும் அறிவுரைகளை ஏற்று பயணிப்பேன். மழை வெள்ள பாதிப்புகள் மற்றும் அரசு நிவாரணம் குறித்து, தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கடுமையாக வருத்தப்பட்டு பேசியுள்ளார்.
என்ன தான் கூட்டணி கட்சித் தலைவராக இருந்தாலும், இன்னும் சில நாளில், அவரையும் சங்கி என முத்திரை குத்தி விடுவர். வேல்முருகன் சொன்ன கருத்து, களத்தை பிரதிபலிக்கும் விஷயம். அதனால், அவரின் கருத்துக்கு நானும் உடன்படுகிறேன்.
எதிர்காலத்தில், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற விஷயத்தை வைத்து, தமிழகத்தில் புதிய அரசியலை உருவாக்க வேண்டும் என்பது என் குறிக்கோளாக இருந்தது. அதைத்தான் என் கருத்தாக பதிவு செய்தேன். அதை உரக்கச் சொன்னதற்காக, கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டேன். இதை தண்டனையாகத்தான் கருத வேண்டும்.
இதன் தொடர்ச்சியாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் என் மீது சில விமர்சனங்களை வைத்துள்ளார். அதை 'அட்வைஸ்' ஆக பார்க்கிறேன். அவரிடமிருந்து கள அரசியலை நிறைய கற்றுள்ளேன். கொள்கை சார்ந்த அரசியலில், அவரை சார்ந்தே என் பயணம் இருக்கும்.
நான் பா.ஜ.,வில் இணையப் போவதாக தகவல் பரப்பப்படுகிறது. நான் யாருடன் இணையப் போகிறேன் என்பதை விட, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தே தீவிரமாக யோசித்து வருகிறேன்.
பா.ஜ.,வில் இணைவது குறித்த கேள்விக்கும், என் எதிர்கால அரசியல் பயணம் குறித்தும் நல்ல முடிவெடுத்து, அதை பத்திரிகையாளர்களை சந்தித்து சொல்வேன்.
என்னை பா.ஜ.,வின் 'பி டீம்' என விமர்சித்தால், என்னைப் போலவே கருத்துகளை பதிவிடும் தமிழக வாழ்வுரிமை கட்சிதலைவர் வேல்முருகனும் பி டீம் தானா?
இவ்வாறு அவர் கூறினார்.